ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் உட்பட ரூ.54 கோடியில் குறுவை சாகுபடி 6 அம்ச திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் உட்பட ரூ.54 கோடியில் குறுவை சாகுபடி 6 அம்ச திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
3 min read

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயத்துக்கு 12மணி நேரமும் மும்முனை மின்சாரம், நெல் சாகுபடிக்கு மானியத் தொகை உள்ளிட்ட ரூ.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எங்களது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க் கடன், மத்திய காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் நான் பதவி ஏற்ற அன்றே முதல் உத்தரவாக கையொப்பமிட்டேன்.

நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியினை மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (1.6.2016) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் குறித்தும், கர்நாடக மாநிலத்திலிருந்து பெறப்பட வேண்டிய தண்ணீர் குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியில், போதிய நீர் அளவு, அதாவது, குறைந்த பட்சம் 90 அடி இருக்கும் போது, குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படும்.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.82 அடியாக, அதாவது, 15.281 டி.எம்.சி என உள்ளது. நீர்வரத்து 102 கன அடியாக உள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 10 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு ஜுன் மாதத்தில் தர வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, 10 டி.எம்.சி. அடி தண்ணீர் கர்நாடகத்திடமிருந்து கிடைத்தாலும், மேட்டூர் அணையில் சுமார் 61 அடி மட்டுமே தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீரை கொண்டு, குறுவை சாகுபடிக்காக ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து விட இயலாது.

குறுவை சாகுபடி செய்யும் 6 டெல்டா மாவட்டங்களில் நடப்பு கோடைப் பருவத்தில் போதிய அளவு மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, குறுவை சாகுபடியை டெல்டா விவசாயிகள் பெருமளவு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி,

1. கடந்த நான்காண்டுகளாக வழங்கியது போல், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

2. டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நெல் நடவுப் பணிகளை உரிய காலத்தே மேற்கொள்ளவும், பயிர் எண்ணிக்கையை பராமரித்து, குறைந்த நீரில் அதிக பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறையினை பின்பற்றி மகசூலை உயர்த்தும் வகையில், நடவு இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணியை மேற்கொள்ள டெல்டா விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

மேலும், இயந்திரங்கள் மூலம் நடவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் என, ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாய் மானியத் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதற்கென 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

3. டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், 90 மில்லிமீட்டர் விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளம் கொண்ட குழாய்கள் 30 எண்கள் கொண்ட ஆயிரம் அலகுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

4. காவிரி டெல்டா பகுதியில், குறுவை சாகுபடியில் மகசூலை உயர்த்த உயரிய தொழில்நுட்பங்களுடன் நுண்ணூட்ட சத்து குறைபாடு உள்ள 50,000 ஏக்கருக்கு மானிய விலையில் நெல் நுண்ணூட்டக் கலவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஏக்கர் ஒன்றுக்கு மானியமாக 170 ரூபாய் வழங்கப்படும். நிலத்தின் உவர்தன்மையை களையும் வகையில் ஒரு லட்சம் ஏக்கருக்கு துத்தநாக சல்பேட்டு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு 400 ரூபாய் மானியமாக வழங்கப்படும். இவற்றுக்கென 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

5.குழாய் கிணறுகள் போதுமான அளவு இல்லாததால் காவிரி துணை ஆறு மற்றும் கல்லணை வாய்க்கால் பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடியை பல ஆண்டுகளாக மேற்கொள்வதில்லை. இப்பகுதி விவசாயிகள் தென்மேற்கு பருவமழையைப் பயன்படுத்தி, உழவுப் பணி மேற்கொள்ளவும், குறைந்த கால பயறு சாகுபடியை 15,000 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ள விதைக்கான மானியம் 100 சதவீதம் வழங்கப்படும். ஏக்கர் ஒன்றுக்கு 1,400 ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதற்கென 2 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

6. காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியில், நிலத்தடி நீர் உவர் நீராக உள்ளதால் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள இயலாது. எனவே, இப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மண்வள மேம்பாட்டிற்காக, மண்ணின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி உழவு மேற்கொண்டு, பசுந்தாள் உரப்பயிரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இதற்கு தேவையான விதைகள் 100 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் மண் வளம் மேம்படுவதோடு, வெண்ணாறு கடைமடைப் பகுதியில் சம்பாப் பருவ நெல் உற்பத்தியும் உயரும்.

என்னால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு 54 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

எனது தலைமையான அரசால் செயல்படுத்தப்படும் இந்த குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும், மண் வளம் மேம்படவும் வழிவகை ஏற்படும்'' என ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in