Published : 08 Jun 2017 09:08 AM
Last Updated : 08 Jun 2017 09:08 AM

சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்து ஆலோசனை: 7 மாவட்ட எம்எல்ஏக்களை சந்தித்தார் முதல்வர்- டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் பங்கேற்பு

டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், நேற்று 2-வது நாளாக மதுரை, தேனி உள்ளிட்ட 7 மாவட்ட எம்எல்ஏக்களை முதல்வர் கே.பழனிசாமி சந்தித்து பேசினார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக அம்மா கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவிதினகரன் கைது செய்யப்பட்டு, கடந்த 2-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். அன்று முதலே அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவரை வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன், பழனியப்பன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வரவேற்றனர். அதன்பின், அவர் பெங்களூருவில் சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உடன் சென்றனர். இதனால் முதல்வர் கே.பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவ்வப்போது 122 எம்எல்ஏக்கள் பலம் எங்களுக்கு உண்டு என முதல்வர் கே.பழனிசாமி தரப்பினர் கூறிவந்த நிலையில், தினகரனுக்கு எம்எல்ஏக்கள் பலம் கொஞ்சம் கொஞ்சமாக அதி கரித்தது. நேற்று முன்தினம் 27 எம்எல்ஏக்கள் அவரை சந்தித்து ஆதர வளித்தனர்.

இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத் தொடர் வருவதால், அதில் ஏதேனும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக மாவட்டவாரியாக எம்எல்ஏக்களை அழைத்து முதல்வர் கே.பழனிசாமி பேசிவருகிறார்.

நேற்று முன்தினம் சென்னை உட்பட 8 வட மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏ.க்களை சந்தித்தார். இதில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். அவர்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக பேசியதாக தெரிவித்தனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘தினகரனை எம்எல்ஏ.க்கள் அவர்கள் சுய விருப்ப அடிப்படையில் சந்திக்கின் றனர்’’ என்றார்.

இந்நிலையில், நேற்று காலை செய்தி யாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ‘‘சசிகலாதான் பொதுச்செயலாளர், தினகரன் தான் துணைப் பொதுச்செய லாளர்’’ என உறுதியாக தெரிவித்தார்.

ஏற்கெனவே தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டதாக அமைச்சர்கள் கூடி முடிவெடுத்து அறிவித்த சூழலில், ராஜேந்திர பாலாஜியின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 4 எம்எல்ஏக்கள் ஆதரவு

இதற்கிடையில், நேற்று மாலை வரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ. ஏ.கே.போஸ் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களும் தினகரன்தான் துணைப் பொதுச்செயலாளர் என்பதில் உறுதியாக உள்ளனர். அதேநேரம் முதல்வர் கே.பழனி சாமி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் தெளிவு படுத்தினர்.

இந்த குழப்பங்களுக்கிடையே, நேற்று 2-வது நாளாக முதல்வர் கே.பழனிசாமி மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்களை இரவு 7 மணிவரை சந்தித்து பேசினார். இதில், தங்கதமிழ்ச் செல்வன், ஜக்கையன், ஏ.கே.போஸ் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

முதல்வருடனான சந்திப்பு தொடர்பாக திருவாடானை எம்எல்ஏ. கருணாஸ் கூறியதாவது:

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தில் நிலுவைத்தொகை, ஆர்.எஸ்.மங்க லத்தில் உள்ள பெரிய கண்மாய் தூர்வாரப் பட வேண்டும் என்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தேன். பேரவைத் தலைவரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளேன். முதல்வரை சந்தித்து கோரிக்கை மட்டுமே வலியுறுத்தியுள்ளேன்.

அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் கருத்து சொல்வது நாகரீகமல்ல. இருப் பினும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட வர்தான் சசிகலா, தினகரன் ஆகியோர். என்னைப் பொறுத்தவரை, அத்தனை பேருக்குமான அடையாளத்தை கொடுத் தது ஜெயலலிதாதான். அவர்களுக் குள்ளே இருக்கும் கருத்து வேறுபாடு களை மறந்து, ஆட்சியை தொடரச் செய்ய வேண்டும். மக்களுக்கான குறைகளை தீர்க்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களுக்கான நிலையான ஆட்சியாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் அதிகமான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக் கிறார்களோ அவர்கள் எடுக்கும் முயற்சி களுக்கு உறுதுணையாக இருப்பேன். தினகரனை எம்எல்ஏக்கள் சந்திப்பதால் எந்த மாற்றமும் இருக்காது. இதை அரசியல் ரீதியாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x