Last Updated : 16 Nov, 2014 04:51 PM

 

Published : 16 Nov 2014 04:51 PM
Last Updated : 16 Nov 2014 04:51 PM

ரஜினியைக் காத்த ஜவஹர்: கே.எஸ்.ரவிக்குமார் கண்கலங்கிய ஷாக் சம்பவம்

'லிங்கா' படப்பிடிப்பின்போது தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று ரஜினியைக் காப்பதற்காக துணிச்சலுடன் செயல்பட்ட ஜவஹவர் குறித்து கண் கலங்கிப் பேசினார் கே.எஸ்.ரவிகுமார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் நன்றியுரை ஆற்ற கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்தார்கள். அவரோ படப்பிடிப்பில் உழைத்த ஒவ்வொருவரின் பெயரையும், அவர்கள் பார்த்த வேலையையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். குறிப்பாக, ஜிம்மி கேமராவை இயக்கிய ஜவஹரின் செயலை நினைத்து கண் கலங்கினார்.

"ஒருநாள் மழையில் ரஜினி வந்து ரயில் பக்கத்தில் நடந்து வருவது போல ஒரு காட்சியை படமாக்கினேன். அந்த மழைக் காட்சியை ஜிம்மி ஜிப் கேமரா வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக செயற்கை மழையை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் கூறிய நேரத்தில், நிஜத்திலேயே நல்ல மழை பெய்தது.

மழையில் ஒயர்கள் எல்லாம் தண்ணீரில் கிடப்பதைக் கவனிக்காமல் ஸ்டார்ட், ஆக்‌ஷன் என்றவுடன், ஜிம்மி கேமரா வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் ஷாக் அடித்தது. ஒரே சத்தம். நான் அதை எல்லாம் கவனிக்காமல், "மழை அந்தப் பக்கம், கேமரா இந்த பக்கம், அந்தப் பக்கம்" என்று கூறிக் கொண்டிருந்தேன். பாட்டு வேறு ஒருபுறம் ஒடிக் கொண்டிருக்கிறது.

ஷாக் அடித்ததில் ஜிம்மி கேமராவை ஆப்ரேட் செய்த ஜவஹர் தூக்கி வீசப்பட்டார். அப்போது, ரஜினி இருந்த பக்கமாக கிரேன் போய்க்கொண்டிருந்தது. தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று மறுபடியும் எழுந்து ஷாக் அடிக்கும் கிரேனைப் பிடித்து நிப்பாட்டினார் ஜவஹர்" என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் பேசாமல் கண் கலங்கினார் கே.எஸ்.ரவிக்குமார்.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x