சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இருந்து அகற்றப்படும் இடிபாடுகளுக்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் நிறுத்தப்பட்ட இடிக்கும் பணி, சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் 'தி சென்னை சில்க்ஸ்' இயங்கி வந்தது. 7 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 மாடியும் முற்றிலும் சேதம் அடைந்தது. நகைக் கடையின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2-ம் தேதி தொடங் கப்பட்டது. இப்பணி 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. கட்டிடத்தை இடிக்கும்போது புழுதி பறந்ததால், சுற்றிலும் துணியால் தடுப்பு அமைக்கப்பட்டு பணி நடந்து வந்தது.

இந்நிலையில், கட்டிடம் இடிக்கும் பணி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி அளவில் திடீரென நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து மாம்பலம் போலீஸார் கூறியபோது, ''கட்டிடத்தை இடிக்கும் போது கிடைக்கும் இரும்புக் கழிவுகள், இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ள தனியார் நிறுவனத்துக்கே சொந்தம் என்று அந்த நிறுவனத்தினர் கூறினர். ஆனால், தங்களுக்கு சொந்தமானது என்று சென்னை சில்க்ஸ் நிர்வாகி ஒருவர் உரிமை கோரினார். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது'' என்றனர்.

இந்நிலையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு, இன்று மீண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in