Last Updated : 07 May, 2017 12:22 PM

 

Published : 07 May 2017 12:22 PM
Last Updated : 07 May 2017 12:22 PM

வறட்சியிலும் மூடப்படாத கோவை குற்றாலம் - நீரின்றித் தவிக்கும் வன விலங்குகள்: இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி

கடும் வறட்சியான சூழலிலும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்தப் பகுதியில் வன விலங்குகள் நீரின்றித் தவிக்கின்றன என்று இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி. கேரள-தமிழக எல்லையான சிறுவாணி ஆறு உற்பத்தியாகும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த அருவி, கோவையிலிருந்து சுமார் 31 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாடிவயல் வனத் துறை சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்தி, நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.

சோதனைச் சாவடியில் உள்ள வனத் துறையினர் சுற்றுலாப் பயணிகள் வைத்துள்ள பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள், தீப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை வாங்கிவைத்துக்கொள்வர். வனத் துறை சார்பில் இயங்கும் சிறிய பேருந்து மூலம், இரண்டு கிலோமீட்டர் வரை வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்வர்.

அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குற்றாலம் அருவிக்கு நடந்துசெல்ல வேண்டும். மலை உச்சியிலிருந்து அடுக்கடுக்கான பாறைகளில் தவழ்ந்து அருவி கொட்டுகிறது. அதில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

அடர்ந்த காடுகளை ஒட்டியுள்ள இந்த அருவி, நொய்யலின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். இந்த வனப்பகுதில் ஏராளமான யானை, சிறுத்தை, கரடி, குரங்கு, செந்நாய்கள் திரிவதால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக அளவில் பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அருவியில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கும்போதோ அல்லது வன விலங்குகள் நடமாட்டம் குறைவாக இருக்கும்போதோ, குறைந்த கட்டணத்தில் பொதுமக்களை அனுமதித்தது வனத் துறை.

எனினும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதாலும், கோவையில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் இல்லாததாலும், இதை சுற்றுலாத் தலமாக மாற்றியது வனத் துறை.

அருவியில் குளிப்பவர்களுக்கு ஆடை மாற்றும் இடம், கழிப்பிடம், மரத்தால் அமைக்கப்பட்ட தொங்கு பாலங்கள், அருவியைக் கடந்து செல்ல படிக்கட்டு பாலங்கள், அருவியில் வெள்ளம் வந்தால் குளிப்பவர்கள் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க இரும்பிலான பாதுகாப்புத் தடுப்புகள், ஆபத்து நேரத்தில் ஒலி எழுப்ப எச்சரிக்கை ஒலிப்பான்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

தொடக்கத்தில் சோதனைச் சாவடியிலிருந்து அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் 3 கிலோமீட்டர் தொலைவு நடந்துதான் சென்றார்கள். அப்படிச் செல்லும்போது, வன விலங்குகள் எதிர்ப்படுவது, யானைகள் சுற்றுலாப் பயணிகளை அடித்துக் கொல்வது உள்ளிட்ட சம்பவங்கள் நிகழந்ததாலும், நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் வீசும் உணவு, பாலித்தீன் பொருட்கள் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாலும், அவற்றைச் சாப்பிடும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதாலும், பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதன்படி, வனத் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள பழங்குடியின மக்கள் மூலம், சூழலுக்கு ஏற்ற திண்பண்டங்கள் விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், கோடைகாலத்தில் கடும் வறட்சி ஏற்படும்போது, கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆண்டுக்கு 2 அல்லது 3 முறைகூட அருவிப்பாதை மூடப்படும்.


அருவிக்குச் செல்லும் பாதையில் உதிர்ந்து கிடக்கும் சருகுகள்

வனத் தீ

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி நிலவியபோதிலும், கோவை குற்றாலம் மூடப்படுவதில்லை. நடப்பாண்டு தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் வறண்டு காணப்படுகின்றன. பல்வேறு இடங்களில் வனத் தீ பரவி, அதை தடுக்க வனத் துறையினர் காடுகளில் தீத்தடுப்புக் கோடுகளை அமைக்கின்றனர்.

கோவை குற்றாலம் அமைந்துல்ள வெள்ளியங்கிரி மலைக்காடுகள், சிறுவாணி மலைக்காடுகளிலும்கூட வறட்சி காரணமாக பலமுறை காட்டுத் தீ ஏற்பட்டு, தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டள்ளன. வனப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால், வாளையாறு முதல் மேட்டுப்பாளையம் சிறுமுகைக்காடுகள் வரை காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது தொடர்கிறது. இதனால் யானை-மனித மோதலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை.

முதுமலை வனப் பகுதியே வறட்சி காரணமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் செல்லவும் அனுமதி இல்லை. ஆனால், கோவை குற்றாலம் பகுதிக்கு இன்னமும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கோவை குற்றால அருவியில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இங்கு சுற்றுச்சூழல் குறித்த கவலையின்றி, சுற்றுலாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சாடிவயல் பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வார விடுமுறை நாட்களில் 2 ஆயிரம் பேருக்குமேல் வருகிறார்கள். இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை கட்டணம் வசூலாகிறது.

கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியால் இந்த வனப் பகுதி மூடப்படும். ஆனால் தற்போது இதுவரை வனப் பகுதியை மூடவில்லை. தற்போது விலங்குகள் தண்ணீர் தேடி அலைகின்றன. தண்ணீர், உணவுக்காக ஊருக்குள் நுழைகின்றன.

கோவை குற்றாலம் சுற்றுவட்டாரக் காடுகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விலங்குகள் உள்ளன. காலை 9 மணிக்கே சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிவிடுகின்றனர். மாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டம் இருப்பதால், இந்தப் பகுதிக்கு விலங்குகள் வருவதில்லை. இதனால் அவை தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

பொதுவாகவே வறட்சிக் காலத்தில் விலங்குகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். மற்ற பகுதிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், இங்கு தண்ணீர் இருந்தும், அதைக் குடிக்க முடியாத நிலைக்கு விலங்குகள் தள்ளப்படுகின்றன.

மேலும், இப்பகுதியில் மரங்கள் காய்ந்சது, சருகுகள் உதிர்ந்து கிடக்கின்றன. யாராவது ஒருவர் தீக்குச்சியை உரசி வீசினாலோ, பீடி, சிகரெட் குடித்துவிட்டு எறிந்தாலோ பெரும் தீ விபத்து நேரிடும். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் கோடை இறுதியில்தான் திடீர் மழையால் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிலர் சிக்கினர். ஒரு பெண் உயிரிழந்தார்.

மலை முகட்டில் விழுந்த நீரிடியே பெண் இறந்ததற்குக் காரணம் என சர்ச்சை கிளம்பியது. தற்போதும், அருவியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இடி, மின்னல் இருந்து கொண்டிருக்கிறது. திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தால் என்னவாகும். எனவே, குறைந்தது 15 நாட்களாவது கோவை குற்றாலத்தை மூடுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். அவர்கள் அதை ஏற்கவில்லை. சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையே முக்கியமாக கருதுகின்றனர் என்றனர்.


கோவை குற்றாலம் பகுதியில் காய்ந்து, இலைகள் உதிர்ந்த நிலையில் காணப்படும் மரங்கள்.

விலங்குகளுக்கு பாதிப்பு இல்லை

வனச் சரகர் தினேஷ்குமார் கூறியபோது, “மற்ற பகுதிகளில் வறட்சி இருந்தாலும், கோவை குற்றாலம் பகுதிகளில் அதிக வறட்சி இல்லை. அருவியில் தண்ணீரும் தொடர்ந்து போதுமான அளவு வந்துகொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் சில நாட்களாகவே மழை பெய்தது. அதனால்தான் அருவிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வன விலங்குகள் தண்ணீர் அருந்துவதில் எந்த இடையூறும் இல்லை.

சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடம் தவிர பல பகுதிகளில் நீரோடைகள் ஓடுகின்றன. அவற்றில் விலங்குகள் நீர் அருந்துகின்றன. அருவியில் வெள்ளம் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை செய்யவும், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

எனினும், கோடைகாலத்தில் கடும் வறட்சி ஏற்படும்போது, கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆண்டுக்கு 2 அல்லது 3 முறைகூட அருவிப்பாதை மூடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x