

சட்டப் பேரவை தேர்தல் முடிந்ததும் விருதுநகர் மாவட்டக் காவல் துறையில் 11 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளது போலீஸாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்ட 13-வது காவல் கண்காணிப்பாளராக பி.அரவிந்தன் நவம்பர் 11-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் "ஹலோ போலீஸ்" திட்டத்தை தொடங்கியதுடன், மாவட்ட காவல் துறையில் பல்வேறு சிறந்த நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
சட்டப் பேரவை தேர்தலின்போது விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அரசியல் கட்சியினர் மீது பாகுபாடின்றி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதில் ஆளும் கட்சியான அதிமுகவினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிட்ட சிவகாசி தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிகபட்சமாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மாவட்டக் காவல் துறையின் செயல்பாட்டுக்கு அதிமுகவினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்தலை யடுத்து விருதுநகர் ஏஎஸ்பி அருண்பாலகோபாலன் உட்பட 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.கள் ஆகியோர் கடந்த வாரம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாற்றுப் பணி ஒதுக்கப்படாமலேயே அதிகாரிகள் 11 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் 2 வாரம் மருத்துவ விடுப்பில் சென்றார். அவருக்குப் பதிலாக மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி கூடுதல் பொறுப்பாக விருதுநகர் மாவட்டத்தை கவனித்து வந்தார்.
இந் நிலையில், மருத்துவ விடுப்பு முடிந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பணியில் சேருவதாக இருந்தது. அதற்காக அவர் முகாம் அலுவலகத்துக்கு வந்துள்ளார். ஆனால், அவரை மீண்டும் ஒரு வாரம் மருத்துவ விடுப்பில் செல்ல மேலிடம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, அரவிந்தன் மீண்டும் ஒரு வாரம் மருத்துவ விடுப்பை நீட்டித்துள்ளார். அன்று பிற்பகலே மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி கூடுதல் பொறுப்பாக விருதுநகர் மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வந்து பணிகளை கவனித்தார்.
இதனால் மாவட்டக் காவல் அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அரவிந்தன் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது. இது மாவட்ட போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.