பார்க் கல்விக் குழுமங்கள் சார்பில் சர்வதேச மகளிர் தினம்: 1,000 மாணவிகள் பங்கேற்ற சிலம்பாட்டம்

பார்க் கல்விக் குழுமங்கள் சார்பில் சர்வதேச மகளிர் தினம்: 1,000 மாணவிகள் பங்கேற்ற சிலம்பாட்டம்
Updated on
1 min read

கோவை பார்க் கல்விக் குழுமங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற ‘துர்கா 17’ சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில், 1,000 மாணவிகள் பங்கேற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பார்க் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்பம் சங்கத் தலைவர் அனுஷா ரவி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்ட சிலம்பம் சங்கச் செயலாளர் ரவிச்சந்திரன் கடந்த 4 நாட்களாக சிலம்பாட்டப் பயிற்சி அளித்தார்.

இதுகுறித்து பார்க் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா ரவி கூறும்போது, “கடந்த 2012-ல் டெல்லியில் ஒரு பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவுடனேயே, பார்க் குழுமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்க முடிவு செய்தோம். இதையொட்டி, 2013 முதல் மகளிர் தினத்தை ‘துர்கா’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு, தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவம் மற்றும் ஆயுதத்தை அடிப்படையாகக் கொண்ட, இந்திய தற்காப்புக் கலையான சிலம்பாட்டத்தை கற்றுக்கொள்ள மாணவியரை ஊக்குவித்தோம்” என்றார்.

மாணவி ஜனனி, பல வகையான சிலம்பாட்டங்களை செய்துகாண்பித்தார். அவர் கூறும்போது, “நான் கடந்த 2 வருடங்களாக சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது. சிலம்பாட்டம் கற்றுக்கொள்வதன் மூலம், இதை ஆபத்துக் காலங்களில் தற்காப்புக்காகப் பயன்படுத்தலாம்” என்றார்.

தொடர்ந்து, திருப்பூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த சிலம்பாட்ட மாணவர்கள், சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியை கின்னஸ் சாதனைப் புத்தகம் மற்றும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற முயற்சித்து வருவதாக பார்க் குழுமங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in