Published : 19 Nov 2014 09:28 AM
Last Updated : 19 Nov 2014 09:28 AM

தருமபுரியில் 11 குழந்தைகள் இறந்ததற்கு சிகிச்சை குறைபாடு காரணம் இல்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

தருமபுரி அரசு மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ள தற்கு சிகிச்சைக் குறைபாடுகள் கார ணம் இல்லை. குறைப் பிரசவம், குழந்தை எடைக் குறைவு போன்ற இயற்கையான காரணங்களே கார ணம். ஆனாலும், 4 நாட்களில் சற்று அதிக இறப்புகள் நடந்துள்ளதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 4 நாட்களில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு செயலாளர் செந்தில் குமார், சமூகநலத் துறைச் செயலாளர் பஷீர் அஹமது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குநர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி 5 பச்சிளம் குழந்தைகள் இறந்தன என்று தெரிந்தவுடன், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தைகள் தீவிர கண் காணிப்புப் பிரிவு ஒருங் கிணைப்பு அலுவலர் டாக்டர் சீனி வாசன் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவக் குறைபாடு இல்லை

அவரது ஆய்வில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எந்தவொரு மருத்துவரீதியான குறைபாடும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங்குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் பச்சிளங்குழந்தை நிபுணர்கள் நாராயண பாபு, சீனிவாசன், குமுதா ஆகியோர் தருமபுரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

குறைந்த எடை குழந்தைகள்

இறந்த குழந்தைகளில் 7 குழந்தைகள் 2.5 கிலோவுக்கு குறைவாக இருந்தன. அதில் 5 குழந்தைகள் 1.2 முதல் 1.75 கிலோ எடை மட்டுமே இருந்தன. அந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறந்தவை.

இறந்த குழந்தைகளில் 8 குழந்தைகள் இதர மருத்துவமனைகளில் இருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவை.

தாய்மார்கள் மிக இளம் வயதினராக இருப்பது, முந்தைய பிரசவத்துக்குப் பிறகு போதிய இடைவெளி விடாதது, குறைப் பிரசவம், குழந்தையின் குறைவான எடை என இயற்கையான காரணங்களாலேயே கடந்த 4 நாட்களில் 11 குழந்தைகள் இறந்துள்ளன.

வழக்கமான இறப்பு விகிதம்

தருமபுரி மாவட்டத்தில் சராசரி யாக மாதமொன்றுக்கு 2,050 குழந்தைகள் பிறக்கின்றன. 39 சிசுக்கள் இறக்கின்றன. இந்த மாத மும் அந்த அளவிலேயே சிசு இறப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், 4 நாட்களில் சற்று அதிக இறப்பு என் பதைக் கருத்தில் கொண்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசு நடவடிக்கைகள்

தருமபுரி மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிக்கலான பிரசவங் களை உரிய நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் வலுப்படுத்தப் படும். எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

தருமபுரியில் விசாரணை நடத்த அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x