

கோவை மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாமுக் கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் முகாம் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து உள்ளது தேக்கம்பட்டி கிராமம். இங்கு பவானி ஆற்றின் கரையோரத்தில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் யானைகள், திருமடங்களுக்குச் சொந்தமான யானைகள் முகாமுக்கு அழைத்து வரப்படுகின்றன. தொடர்ந்து 48 நாட்கள் நடத்தப்படும் முகாமில் யானைகளுக்கு சத்தான தீவனமும், ஓய்வும் வழங்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் இருந்து யானைகள் அழைத்து வரப்படுவதால், அவற்றைக் காண பொதுமக்களும் ஏராளமானோர் முகாமுக்கு வந்து செல்வர். வழக்கமாக ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கி, ஜனவரி முதல் வாரத்தில் முடிவடையும். கடந்த ஆண்டு சற்று தாமதமாக ஜன.7-ம் தேதி தொடங்கப்பட்டது. பிப்ரவரி 23-ம் தேதி முடிவடைந்தது. 43 யானைகள் அதில் பங்கேற்றன.
இந்த ஆண்டும் முன்கூட்டியே முகாம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், யானைகள் நலவாழ்வு முகாம் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலவிய அரசியல் சூழல்களால் முகாம் நடத்துவதற்கான முகாந்திரமே இல்லாத சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பவானி ஆற்றங்கரை ஓரத்தில் வழக்கமாக யானைகள் முகாம் நடக்கும் இடத்தில், யானைப் பாகன்கள் தங்குவதற்கான கூடாரங்கள், சமையல் அறைக் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. யானைகளை கட்டி வைப்பதற்கான பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. வனப் பகுதியை ஒட்டியிருப்பதால், காட்டு யானை கள் ஊடுருவலைக் கண்காணித்துத் தடுக்க, வனத்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்களும், பாதுகாப்புக்காக சோலார் மின் வேலிகளும் அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘யானைகள் நலவாழ்வு முகாம் எப்போது தொடங்குகிறது என்பது குறித்த அதிகாரபூர்வ உத்தரவு ஏதும் இதுவரை வரவில்லை. ஆனால், முகாம் அமைப்பதற்கான பணிகளை முடித்து, தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவு வந்துள்ளது. அதனால் பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் முகாம் தொடங்கும் தேதி அறிவிப்பு வரலாம். பிப்ரவரி முதல் வாரத்தில் நலவாழ்வு முகாம் தொடங்க வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.