

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான வயது வரம்பை ஐந்தாண்டு உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஆகிய முதல் தொகுதி பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. மொத்தம் 79 பணியிடங்களை நிரப்புவதற்கான முதனிலைத் தேர்வு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுத்துறை வேலைவாய்ப்புகள் வேகமாக குறைந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கும் கூடுதலாக இருந்தது. ஆனால், முந்தைய தி.மு.க. அரசும், இப்போதைய அ.தி.மு.க. அரசும் மேற்கொண்டு வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை தற்போது 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்து விட்டது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில் அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு கோரி புதிதாக பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், ஆண்டுக்கு 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலை வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 0.15 விழுக்காடு மட்டுமே. தமிழகத்தில் அரசு வேலைக்கான வாய்ப்புகள் இந்த அளவுக்கு குறைந்து விட்ட நிலையில், வேலைதேடும் பட்டதாரிகளுக்கு எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு சலுகைகளையும், விதிவிலக்குகளையும் தர வேண்டும்.
ஆனால், தமிழக அரசோ இருக்கும் சலுகைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் தவிர்த்த மற்ற பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முதல் தொகுதி பணிகள்( குரூப்-1) உட்பட எந்த பணிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் நலன் கருதி போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். முந்தைய ஆட்சியில் அதையேற்ற கலைஞர், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பை 30-லிருந்து 35 ஆக உயர்த்தி ஆணையிட்டார். இதனால் இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களின் நாற்பதாவது வயது வரை போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.
எனினும், கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, இது தொடர்பாக முந்தைய ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டது. இதனால் பொதுப்பிரிவினரில் 30 வயதைத் தாண்டியவர்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் 35 வயதைத் தாண்டியவர்களும் அரசு வேலைவாய்ப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவர்கள் அடிமாட்டு சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.இது பட்டதாரி இளைஞர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி ஆகும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு பணி நியமனத்தை தடை செய்ததன் மூலம் பட்டதாரிகளின் அரசு வேலைவாய்ப்பை அ.தி.மு.க. அரசு பறித்தது. இதனால், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணியிடங்களுக்கான தேர்வுகள் உட்பட அனைத்து போட்டித்தேர்வுகளிலும் பங்கேற்பதற்கான வயது வரம்பை ஐந்தாண்டு உயர்த்த வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.