ரஜினி கொடும்பாவியை எரித்த தமிழர் முன்னேற்றப் படையினர் கைது

ரஜினி கொடும்பாவியை எரித்த தமிழர் முன்னேற்றப் படையினர் கைது
Updated on
1 min read

சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று (திங்கள்கிழமை) காலையிலேயே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னி சாலை பிரதான ரோட்டில் இருந்தே போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். செம்மொழி பூங்கா அமைந்துள்ள பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செம்மொழிப் பூங்கா அருகே திரண்ட தமிழர் முன்னேற்றப் படையினர் "தமிழ்நாடு தமிழருக்கே, கன்னட நடிகர் ரஜினிகாந்த் ஒழிக" போன்ற கோஷங்களை எழுப்பினர்.

எதிர்ப்பு ஏன்?

கடந்த 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் முதல் நாளில், "ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்" என ரஜினி கூறியிருந்தார். இதுபல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் கடைசி நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, "நான் பச்சைத் தமிழன். தமிழகத்தில் அரசியல் நிலவரம் கெட்டுப் போய் இருக்கிறது. ஜனநாயகம் சீர்கெட்டுள்ளது. மாற்றம் தேவை. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் என்ற பெயரில் சிலர் வேண்டாத கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இந்த அளவுக்கு தமிழர்கள் கீழ்த்தரமாக சென்றுவிட்டது வருத்தமளிக்கிறது. போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என்றெல்லாம் பேசியிருந்தார்.

இந்நிலையில் தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக ரஜினிகாந்த் பேசியதற்கு தமிழர் முன்னேற்றப் படை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தது.

கொடும்பாவிக்குள் வெடிப் பொருட்களை வைத்து எரித்ததால் அப்பகுதியை கரும்பு புகை சூழ்ந்தது | படம்: எல்.சீனிவாசன்.

அதன்படி காலை 11.30 மணியளவில் போயஸ் தோட்டப்பகுதிக்கு வந்த தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் கி.வீரலட்சுமி உள்ளிட்டோர் ரஜினிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in