பணியின்போது இறந்த அரசு ஊழியரின் திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியின்போது இறந்த அரசு ஊழியரின் திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியரின் திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் தர்மராஜபுரம் ஆலங்காயத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாரி. இவரது தந்தை ஜி.சுப்ரமணியம், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 1993-ம் ஆண்டு இறந்தார். தனது தந்தை பணியின்போது இறந்ததால் கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று விஜயகுமாரி கால்நடை பராமரிப்புத்துறைக்கு விண்ணப்பித்தார்.

அரசு ஊழியரின் திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கோர உரிமையில்லை என்ற அரசு உத்தரவை காரணம்காட்டி விஜயகுமாரியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 2001-ம் ஆண்டு விஜயகுமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி டி.அரிபரந்தாமன் அளித்த தீர்ப்பில், “அரசு ஊழியரின் திருமண மான மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை கோர உரிமையிருக்கும்போது, திருமணமான மகளுக்கு மட்டும் அந்த உரிமை இல்லை என்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே மனுதாரருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வுசெய்யுமாறு தமிழக அரசு சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கோரத் தகுதியில்லை என்றும், மனுதாரர் 35 வயதை கடந்துவிட்டார் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் அளித்த தீர்ப்பு வருமாறு:

திருமணமான மகனுக்கு உள்ள அதே உரிமை திருமணமான மகளுக்கும் உண்டு. எனவே, திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உண்டு. மனுதாரர் 35 வயதை கடந்துவிட்டார் என்று சொல்வதை ஏற்க முடியாது. வழக்கு தொடர்ந்தபோது அவருக்கு 35 வயதுக்குள்தான் இருந்தது.

எனவே, அவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in