

சேலம் மத்திய சிறை கண்காணிப் பாளர் மற்றும் சிறை தலைமை வார்டன் ஆகியோர் தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தாக சேலத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் போலீஸில் புகார் செய்தார்.
சேலம் முள்ளுவாடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை தடுக்க முயற்சித்ததாக எழுந்த புகாரில் பியூஸ் மானுஷ் உள்ளிட்ட 3 பேரை கடந்த 8-ம் தேதி போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 21-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த பியூஸ் மானுஷ் தன்னை சிறை கண்காணிப் பாளர் மற்றும் சிறைக்காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், நேற்று சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத் துக்கு தனது மனைவி மோனிகா மற்றும் ஆதரவாளர்களுடன் வந்த பியூஸ் மானுஷ், சேலம் சிறையில் இருந்தபோது சிறை கண்காணிப்பாளர், தலைமை வார்டன் ஆகியோர் தாக்கியதாக புகார் மனு கொடுத்தார்.
இதுகுறித்து பியூஸ் மானுஷ் கூறியதாவது:
வழக்கு தொடர்பாக சேலம் சிறையில் போலீஸார் அடைத்த போது, எனக்கு புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந் ததால், ரத்த இழப்பு ஏற்படக்கூடாது என்று தெரிவித்தேன். ஆனால், சேலம் மத்திய சிறை கண்காணிப் பாளர், தலைமை வார்டன் ஆகியோர் என்னை கடுமையாக தாக்கினர். இதனால், எனக்கு உடலில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், தேசியக்கொடியை நான் எரித்துவிட்டதாக, சிறைக்குள் புரளி பரப்பி, எனக்கு பலரும் மிரட்டல் விடுக்கும் நிலைக்கு ஆளாக்கினர். எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சிறைக் கண்காணிப் பாளர், தலைமை வார்டன் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புகார்மனுவை பெற்றுக் கொண்ட போலீஸார் சிறைக்குள் நடந்த சம்பவம் என்பதாலும், பியூஸ் மானுஷ் நீதிமன்றக் காவலில் இருந்த நேரத்தில் சம்பவம் நடந்ததாலும், இதுகுறித்து சட்ட நிபுணர்களின் கருத்தை அறிந்த பின்னரே வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.