

சென்னையில் மெரினா, திருவான்மியூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் திங்கள்கிழமை திடீர் மறியலில் ஈடுபட்டனர். மெரினாவில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மறியல் செய்தவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
சென்னையில் ஓடும் ஆட்டோக் களில் மீட்டர் கட்டணம் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. மீட்டர் திருத்தப்படாத ஆட்டோக்களையும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களையும் கண்டுபிடித்து அபராதம் மற்றும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் என போக்கு வரத்து துறையும், போக்குவரத்து காவல் துறையும் தனித்தனியாக தொலைபேசி எண்களை வெளியிட்டன. ஆட்டோ ஓட்டுநர்கள் செய்த முறைகேடுகள் குறித்து தொலைபேசியில் பொதுமக்கள் கூறிய புகார்களின் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்கள், மறியல் என தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையில் திங்கள்கிழமை மட்டும் 6 இடங்களில் சாலை மறியல் நடத்தினர்.
மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே உள்ள எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து ஆணையரின் அலுவலகம் உள்ளது. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும்வகையில் உழைப்பாளர் சிலை அருகே 300–க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்துக்கு வந்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் ஆட்டோக்களை சாலைகளிலேயே விட்டனர். இதனால் மெரினா சாலையில் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்பட்டது. அவற்றை அகற்றக்கோரி போலீஸ் அதிகாரிகள் கூறியும் யாரும் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள் மெரினா சாலையில் திடீர் மறியல் நடத்தினர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அப்போது அவ்வழியாகச் சென்ற சில பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து அவர்களை கலைந்து போகச்சொல்லியும் கேட்காததால், காவல் துறையினர் தடியடி நடத்தி மறியல் செய்தவர்களை விரட்டியடித்தனர். 200 பேரை கைதும் செய்தனர். இந்த சம்பவத்தால் மெரினா சாலை பரபரப்பாக காணப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆட்டோக்களுடன் திரண்டனர். சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் போக்குவரத்து ஆணையர் பிரபாகர் ராவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதேபோல் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே போராட்டம் நடத்தி, மறியலுக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை காவல் துறையினர் விரட்டியடித்தனர்.
தியாகராய நகர் துரைசாமி சாலையில் மறியல் செய்த ஆட்டோ ஓட்டுநர்களால் தியாகராய நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாம்பலம் காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
திருவான்மியூர் சிக்னல் அருகே 500–க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு மறியல் செய்தனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை கைவிடச் செய்தனர். ஆவடி அண்ணா சிலை அருகிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல் செய்தனர். போக்குவரத்து உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.