

மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையில் நிலைத்த தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து விற்கப்படுவதற்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்தது.
இதன் அடிப்படையில் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து வந்தது. இவ்வாறு மாற்றம் செய்வதால் பெட்ரோல், டீசல் விலையில் நிலைத்த தன்மை இல்லாமல் விலை ஏறிக்கொண்டே இருக்கும் போது பொது மக்கள் குறிப்பாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 1 ஆம் தேதி முதல் புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், சண்டிகர், ஜாம்ஷெட்பூர் ஆகிய 5 நகரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதே போல நாடு முழுவதும் வருகின்ற 15-ம் தேதி நள்ளிரவு முதல் நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
மத்திய பாஜக அரசின் அனுமதியோடு எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால் பெருமளவு பாதிக்கப்படுவது நுகர்வோர். மேலும் அன்றாடம் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் என்றால் நுகர்வோருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தேவையில்லாத பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உண்டு.
மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்திட வேண்டும். குறிப்பாக சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்திட வேண்டும்.
இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல் ஆகியவை பொது மக்களின் அன்றாடத்தேவையாக, அவசியத்தேவையாக பயன்படுத்தப்படுகிறது. அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும்போது விவசாயத்திற்கும், வாகனப் போக்குவரத்துக்கும் கூடுதல் செலவாகிறது, விலைவாசி ஏறுகிறது. அதே சமயம் பெட்ரோல், டீசல் விலை குறையும் போது விவசாயத்திற்கும், வாகனப் போக்குவரத்துக்கும் ஆகின்ற செலவும், விலைவாசியும் குறைவது அரிது.
எனவே மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையில் நிலைத்த தன்மையைக் கொண்டுவந்து பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.