தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தமாகா

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தமாகா
Updated on
1 min read

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதை அதிகாரபூர்வமாக தன் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) பிற்பகல் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகிய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தமாகா கட்சி அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் கூட்டணி குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

அதற்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் சென்றனர். அங்கு விஜயகாந்தை சந்தித்துப் பேசினர்.

அதைத் தொடர்ந்து, 26 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு விவரம்:

தேமுதிக - 104 தொகுதிகள்

மதிமுக - 29 தொகுதிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி- 25 தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25 தொகுதிகள்

இந்திய கம்யூனிஸ்ட் - 25 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் - 26 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காக தேமுதிக 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேரும் முடிவில் ஆரம்பம் முதலே இருந்தது. இந்த சூழலில், ஆரம்பத்தில் தமாகா கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தர அதிமுக தரப்பு மறுத்தது.

ஒரு கட்டத்தில் தொகுதிகளை குறைத்துக் கொடுத்தாலும் பரவாயில்லை அதிமுகவுடன் இணைவது என்று தமாகா தரப்பு முடிவெடுத்தது.

ஆனால், இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதன்பேரில், தேமுதிக ம.ந.கூட்டணி அணியில் சேருவதற்கான முடிவில் தமாகா உள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்தன.

இத்தகைய சூழலிலேயே ஜி.கே.வாசனுடன் விஜயகாந்த், வைகோ பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுள் ஒருவரான திருமாவளவன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in