Published : 28 Jan 2017 09:04 AM
Last Updated : 28 Jan 2017 09:04 AM

கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கன் முத்து மண்டபத்தை பராமரிக்க கோரிக்கை

கண்டியை ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் தமிழகத்தின் மதுரை, தஞ்சை பகுதியைச் சேர்ந்த நாயக் கர் வம்சத்தில் இருந்து பெண் எடுப்பதை வழக்கமாகக் கொண்டி ருந்தனர். அதனால், கண்டியை ஆளும் வாய்ப்பு தமிழகத்து நாயக்கர்களுக்கு கிடைத்தது.

அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த விஜய ராஜசிங்கன் கண்டியின் முதல் தமிழ் மன்னர் ஆனார். இவருக்கு வாரிசு இல்லா ததால் இவருக்குப் பின்னால் மைத்துனர் கீர்த்தி ராஜசிங்கன் அப்போது வழக்கத்தில் இருந்த ‘மருமக்கட்தாயம்’ என்ற முறைப்படி ஆட்சிக்கு வந்தார்.

இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இவரது தம்பி ராஜாதி ராஜசிங்கனுக்கும் வாரிசு இல்லா ததால் அவரது பட்டத்து ராணி யின் தங்கை சுப்பம்மாளும் அவரது மகன் கண்ணுசாமியும் மதுரையில் இருந்து கண்டிக்கு அழைக்கப் பட்டனர். பின்னாளில் கண்ணு சாமிக்கு விக்கிரம ராஜசிங்கன் என்று பெயர் மாற்றி 1798-ல் அவரை கண்டிக்கு அரசராக்கினார் கீர்த்தி ராஜசிங்கன்.

1815-ல் நடந்த கடும் போரில் விக்கிரம ராஜ சிங்கனை பிரிட்டிஷார் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் வசமானது கண்டி. விக்கிரம ராஜசிங்கனும் அவரது 3 மனைவிகள் உள்ளிட்டோரும் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டனர். 1832 ஜனவரி 30-ல் தனது 52-வது வயதில் ராஜசிங்கன் காலமானார். அதன் பிறகு அவரது வாரிசுகளை வேலூர் கோட்டையில் இருந்து தஞ்சை கண்டி ராஜா அரண் மனைக்கு மாற்றியது பிரிட்டிஷ் அரசு.

1990-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனுக்கு முத்து மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படியே, வேலூரில் விக்கிரம ராஜசிங்கனின் சமாதி அமைந்துள்ள இடத்தில் ரூ.7 லட்சம் செலவில் முத்துமண்டபம் கட்டப்பட்டது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ராஜசிங்கனின் ஏழாம் தலைமுறை வாரிசான மதுரையைச் சேர்ந்த வெ.அசோக்ராஜா, “ஆண்டுதோறும் ஜனவரி 30-ல் விக்கிரம ராஜசிங்கனின் குருபூஜை விழாவை வேலூரில் நடத்துவோம். இந்த ஆண்டு 186-வது நினைவு தின குருபூஜை விழா எடுக்கிறோம். இந்த நேரத்தில், கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கும் விக்கிரம ராஜ சிங்கன் முத்து மண்டபத்தை அரசு முறையாக பராமரிப்பதுடன் அங்கே அவரைப் பற்றிய முக்கியத் தகவல்களை காட்சிப்படுத்த வேண் டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x