சோதனையான காலக்கட்டத்தில் விலகுவது சந்தர்ப்பவாதம்: வாசன் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு

சோதனையான காலக்கட்டத்தில் விலகுவது சந்தர்ப்பவாதம்: வாசன் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, சோதனையான காலக்கட்டத்தில் விலகுவது சந்தர்ப்பவாதம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தனிக்கட்சி தொடங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கட்சியின் பெயர், கொடியை விரைவில் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கட்சிக்கு சோதனையான காலக் கட்டத்தில் கட்சியில் இருந்து விலகு வதும், விமர்சிப்பதும் சந்தர்ப்ப வாதம். காங்கிரஸ் கட்சியில் இருந்து விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி, காமராஜர் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை கட்டாயம் ஏற்படும்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நல்ல மனிதர். அவரால் தனித்துச் செயல்பட முடியாததைப் பார்க்க பாவமாக இருக்கிறது. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவனை காங்கிரஸ் கட்சி அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், திருநாவுக்கரசர், குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், மாநில துணைத் தலைவர் வசந்தகுமார், மூத்த வக்கீல் காந்தி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து பிரின்ஸ் எம்எல்ஏ, நிருபர்களிடம் கூறும் போது, ‘பதவி வரலாம், போகலாம். ஆனால், காங்கிரஸில் தொண்ட னாக இருக்கவே விரும்புகிறேன். சோதனையான காலக்கட்டத்தில் கட்சியைவிட்டுப் போவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்றார். ‘உங்கள் நண்பர் ஜான் ஜேக்கப் எம்எல்ஏ, வாசன் அணிக்கு போயிருக்கிறாரே’ என்று கேட்டதற்கு, ‘அவர் திரும்பவும் காங்கிரஸுக்கே வருவார்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in