

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக குழாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பருவமழை குறைவு, கடும் வெப்பம் போன்ற காரணங்களால் சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, பிற நீர் ஆதாரங்களில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டது. இதற்காக புறநகர் பகுதியில் உள்ள கல்குவாரி, விவசாய கிணறுகள், ஏரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கல்குவாரி தண்ணீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு குடிநீருக்கு பயன்படுத்தலாம் என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. இதையடுத்து முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட குவாரிகளில் இருந்து தண்ணீரை ராட்சத பைப்புகள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரி அருகேயுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து செல்லும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதா வது: செம்பரம்பாக்கம் ஏரிக்கு அரு கில் அமைந்துள்ள இந்த குவாரியில் அதிகளவு தண்ணீர் உள்ளது. பல அடி ஆழத்தில் உள்ள குவாரியில் இருந்து தண்ணீரை எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக குழாய் மூலம் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை, செம்பரம் பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, சென்னை நகருக்கு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கல்குவாரிகளில் உள்ள தண்ணீர், சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை தற்காலிகமாக போக்க போதுமானதாக இருக்கும். ஏரிகளில் நீர் இருப்பு முழுவதும் குறையத் தொடங்கியுள்ளதால் தற்போது இந்த கல்குவாரி தண் ணீர் கைகொடுக்கும் என்றார்.