அன்புமணியை எம்.பி. ஆக்க திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்கியது பாமக

அன்புமணியை எம்.பி. ஆக்க திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்கியது பாமக
Updated on
2 min read

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அன்புமணி ராமதாஸை வெற்றிபெறச் செய்ய பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ள பா.ம.க.வினர், தற்போதே இரவு நேரத்தில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ஏற்கெனவே 5 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் தங்களது தொகுதிகளில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அன்புமணி வேட்பாளரா?

இந்நிலையில், தருமபுரி தொகுதியில், அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சியினரிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சித் தலைமை நேரடியாக அறிவிக்காத நிலையிலும், அன்புமணிதான் வேட்பாளராக்கப்படுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பாமக மாநில துணைப் பொதுச் செயலர், அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருப்பதால், அரசியல் கட்சிகளின் ஜனநாயகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரைவில், நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளார். எனவே, கட்சியைப் பலப்படுத்தும் பணிக்காக, 144 தடை உத்தரவை விலக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இதன்மூலம், அன்புமணி ராமதாஸ், தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

ரகசிய திண்ணைப் பிரச்சாரம்

பாமக.வினர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக, ரகசிய திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். தடை உத்தரவு அமலில் இருப்பதால், மேடை அமைத்து, பொதுக்கூட்டம் நடத்தவோ, பெரிய அளவில் கூட்டம் சேர்க்கவோ முடியாது. எனவே, ஒன்றியங்கள் வாரியாக கட்சி நிர்வாகிகளைத் திரட்டி அருகில் உள்ள மாவட்டத்தில் கூட்டம் நடத்தியுள்ளனர்.

அதில், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தடை உத்தரவை மீறாத வகையில் செயல்படுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, மாவட்டம் முழுவதும் பாமக கிளை நிர்வாகிகள் பிரச்சாரப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டாமல், ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் திண்ணைப் பிரச்சார வடிவில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 5 முதல் 10 பேர் வரை இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கூடி, 2 மணி நேரம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்தக் கூட்டத்தில், இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

மக்கள் சந்திப்பு

குடும்பத்தினர், உறவினர்களைச் சந்தித்துப் பேசி, பிரச்சாரப் பணிகளை நடத்துமாறு அவர்களிடம் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதன்படி, கிளை நிர்வாகிகள் இரவு சுமார் 7 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள்ளாக மக்களைச் சந்தித்துப் பேசி, பாமக.வுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “ஆளுங்கட்சியான அதிமுக.வும், எதிர்க்கட்சியான திமுக.வும் தொடர்ந்து வன்னியர் சமூகத்துக்கு துரோகங்களையே செய்துள்ளது. மேலும், அண்மைக்காலமாக பாமக.வை மக்கள் விரோதக் கட்சி என்று சித்தரிக்கும் முயற்சியிலும் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

நாங்கள் சுட்டிக்காட்டும் சில உண்மைகள், பலருக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது. ஆனால், எங்கள் பேச்சும் செயல்பாடும் உள்நோக்கம் இல்லாதது என்பதை, தேர்தல் முடிவு நிரூபிக்கும். இப்போது கட்சியைப் பலப்ப டுத்தும் பணியிலும் தேர்தல் பிரச்சாரத்திலும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், 144 தடை உத்தரவை மதிக்க வேண்டும் என்பதால், அதிக அளவில் ஆட்களைத் திரட்டாமல், வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இளைஞர்களிடம் தென்படும் எழுச்சி, தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in