

பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பேரவைத் தலைவர், தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துரைமுருகன், பொன்முடி, ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லிக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் ஆகியோர் கடந்த 17-ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது ஒரு மனுவையும் குறுந்தகட்டையும் அவர்கள் அளித்தனர். அந்த குறுந்தகட்டில், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.சரவணன், கனகராஜ் ஆகியோர் 2 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷனில்’ சிக்கிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த விஷயத்தில் தலையிட்டு, மீண்டும் பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கும் உத்ரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஏற்கெனவே நடந்த பெரும்பான்மை வாக்கெடுப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதையும், மீண்டும் உரிய விதிகள்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியிருப்பதையும் தனது மனுவில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ‘ஸ்டிங் ஆபரேசன்’ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்திருப்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த 3 கோரிக்கைகளும் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும், அவர் அளித்த மனு மற்றும் குறுந்தகட்டை பேரவைத் தலைவர் பி.தனபால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.