முதியோர் பஸ் பாஸ் திட்டம் பயனற்றது: ராமதாஸ் கருத்து

முதியோர் பஸ் பாஸ் திட்டம் பயனற்றது: ராமதாஸ் கருத்து
Updated on
1 min read

மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசு வழங்கும் 10 டோக்கன்களின் மதிப்பு ரூ.30 முதல் 50 வரை மட்டுமே இருக்கும் என்பதால் இந்த பஸ் பாஸ் திட்டம் பயனற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறும்போது, "தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் அரைகுறை திட்டமாகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி என்னவாயிற்று?

தமிழகம் முழுவதும் 58 வயது நிரம்பியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதி மறந்து போனதா? இல்லை இது மக்களை ஏமாற்றும் முயற்சியா? மாதத்துக்கு 10 முறை இலவச பயணத்தின் மதிப்பு 30 ரூபாயைத் தாண்டாது. இது திட்டமல்ல வெறும் ஏமாற்று வேலை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "பா.ம.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் 58 வயது நிரம்பியவர்களுக்கு எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்ல இலவச பேருந்து பயணச் சலுகை அளிக்கப்படும். சென்னையில் அனைவரும், அனைத்துப் பேருந்துகளிலும் நிபந்தனையின்றி இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் பாமக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் 15 கி.மீ வரை அனைவரும் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்" என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டம் 24.2.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பைக் கண்டறிந்து மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in