

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, நம சிவாய கோஷம் எழுப்பி, ஆடிப் பாடி பரவசமடைந்தனர்.
ஆண்டுதோறும் மகா சிவராத் திரி விழா ஈஷாவில் விமரிசையாக நடைபெறும். தற்போது உலகி லேயே மிகப் பெரிய அளவில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை திருமுகம் அமைக்கப்பட்டு, அதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்துவைத்தார்.
விழா மேடையில் யோகேஷ்வர லிங்கத்துக்கு கைலாய தீர்த்தத்தை அர்ப்பணித்த பிரதமர், ஜக்கி வாசுதேவ் எழுதிய ‘ஆதியோகி - யோகத்தின் மூலம்’ என்ற புத்த கத்தை வெளியிட்டு, மகா யோக வேள்வியைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து இரவு முழுவதும் விழா விமரிசையாக நடைபெற்றது.
ஜக்கி வாசுதேவ் பேசும்போது, “சுகமும் துக்கமும் நமக்குள்தான் நிகழ்கின்றன. நமது மகிழ்ச்சிக்கு நாம்தான் பொறுப்பு. நம்மைப் பண்படுத்த, மேம்படுத்த யோகா உதவும். மனித உடலைமைப்பைக் கையாளும் அறிவியல் நம்மிடம் இருக்கிறது. ஆதியோகியின் திருமுகத்துக்கு வடிவம் கொடுக்க, எனக்கு 2.5 ஆண்டுகளாகின. ஆனால், ஈஷா மைய தன்னார்வத் தொண்டர்கள் 8 மாதங்களில் இதை உருவாக்கியுள்ளனர். உலகில் உள்ள தலைவர்களில், மோடி மட்டுமே சாலையில் அமர்ந்து, மக்க ளுடன் சேர்ந்து யோகா செய்துள் ளார். அவர் ஒரு யோக வீரராக விளங்குகிறார்” என்றார்.
தொடர்ந்து, ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் ‘ஆதியோகி வரலாறு’ இசை, நடன நிகழ்ச்சி நடைபெற் றது. பிரபல பின்னணிப் பாடகர் கைலாஷ் கேர், ஆதியோகி குறித்து பாடினார். மேடையில் இருந்து இறங்கி மக்களிடையே நடந்து வந்த ஜக்கி வாசுதேவ், ஆதியோகி குறித்த பாடல்களுக்கு, மக்களுடன் இணைந்து நடனமாடினார்.
மைதானத்தில் கூடியிருந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களில் பெரும்பாலானோர் அவருடன் இணைந்து, ‘நம சிவாய’ எனக் கோஷமெழுப்பி பரவசத்துடன் ஆடிப் பாடினர்.
எல்.கே.அத்வானி வருகை
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தார். அவருடன், அவரது மகள் பிரதீபா அத்வானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் அவரை வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு சென்றார். வழியெங்கும் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை (நாளை) வரை ஈஷா மையத்தில் அவர் தங்குகிறார்.