Last Updated : 29 Mar, 2017 11:49 AM

 

Published : 29 Mar 2017 11:49 AM
Last Updated : 29 Mar 2017 11:49 AM

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது: தொடர்ந்து 7-வது ஆண்டாக தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. தொடர்ந்து 7வது ஆண்டாக இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் இறுதியிலோ, ஏப்ரல் தொடக்கத்திலோ பட்ஜெட் தாக்கலாவது வழக்கம். கடந்த 2011-ம் ஆண்டு ரங்கசாமி முதல்வரானார். அப்போது முதல் அவரது ஆட்சி காலம் வரை தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்தான் தாக்கலானது. இந்நிலையில் 2016-ல் காங்கிரஸ் வென்று நாராயணசாமி முதல்வரானார். தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. தற்போது மத்திய அரசு நிதி இறுதி செய்யாததால் தொடர்ந்து 7வது ஆண்டாக இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது.

புதுச்சேரி சட்டமன்றம் மீண்டும் மார்ச்-30-ம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுவதாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் உள்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி, 4 மாத செலவினங்களுக்கு தேவையான நிதிக்கு அனுமதி கோரி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த நாளான 31-ம் தேதி சட்டமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுனரின் உரை இடம் பெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தில் ஆளுனர் உரை இடம் பெறவில்லை. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படுவதால் ஆளுனர் உரை இல்லை.

பல்வேறு விசயத்தில் முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் உள்ள பனிப்போரால் தொடர்ந்து நடப்பாண்டு சட்டமன்றத்தில் ஜனவரியில் நடந்த முதல் கூட்டத்தில் துணை நிலை ஆளுனரின் உரை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது பட்ஜெட்டையொட்டி ஆளுநர் தலைமையில் நடைபெற வேண்டிய திட்டக்குழு கூட்டமும் இம்முறை கூட்டப்படவில்லை.

எப்போது மத்திய அரசு நிதி ?

பட்ஜெட் தொடர்பாக அரசு வட்டாரங்களில் கேட்டதற்கு, "புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பல காரணங்களால் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது. ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை இதுவரை இறுதி செய்யாததால் பட்ஜெட் தாக்கல் செய்வது தள்ளிப்போய் உள்ளது.

அதேசமயம் நிதி ஆண்டு தொடங்க உள்ள ஏப்ரல் மாதத்துக்கு அரசின் செலவுக்கு நிதி தேவை என்பதால் இம்மாத இறுதிக்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். அதையொட்டி சட்டப்பேரவை 30-ல் கூடுகிறது.

மேலும் மத்திய அரசு இணைப்பு பட்ஜெட் இம்முறை தாக்கல் செய்யவில்லை. அதில்தான் புதுச்சேரி நிதி ஒதுக்கீடு தெரியவரும் என்பதும் ஓர் காரணம்.

அதனால் மத்திய அரசு நிதி தந்தவுடன் ஏப்ரல் மாதம்தான் பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x