

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கழிவுநீரை சுத்திகரித்து, அதைக் கொண்டு பூங்காக்களைப் பராமரிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னையில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கேட்கும் குடிநீரை காலத்தோடு வழங்க முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் அவதிப்பட்டு வரு கிறது. இதற்கிடையில், சென்னை மாநகரப் பகுதியில் உள்ள 500-க் கும் மேற்பட்ட பூங்காக்களில் உள்ள தாவரங்களைப் பராமரிக்க, போதிய நீர் கிடைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில், கழிவுநீரை சுத்திகரித்து, அதில் கிடைக்கும் நீரைக்கொண்டு, பூங் காக்களைப் பராமரிக்கும் தொலை நோக்குத் திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், தியாகராயநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோடம்பாக்கம் பூங்கா, ஜீவா பூங்கா, நடேசன் பூங்கா, சிஐடி. நகர் பூங்கா ஆகியவற்றை பரா மரிப்பதற்கு தினமும் தேவைப்படும் 80 ஆயிரம் லிட்டர் நீரை, அதே பகுதியில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தத் திட்ட மிட்டிருக்கிறோம். அதற்காக அப் பகுதியில் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க இருக்கிறோம். மேலும் தியாகராயநகர் பகுதிகளில் உள்ள பூங்காக்களைச் சீரமைத்து, பசுமைப் போர்வையை அதிகரிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ.7 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டம் மாநகரின் மற்ற பகுதி களுக்கும் விரிவுபடுத்தப்படும். இனி எத்தகைய வறட்சி ஏற்பட் டாலும், கழிவுநீரை சுத்திகரித்து, பூங்காக்களைப் பசுமையாக பராமரிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.