

ரயில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மை நிலை விரைந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் வடநாட்டு கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தமிழகத்தில் நடைபெற்று இருப்பதால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
ரயில் கொள்ளையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற செய்தி தமிழக மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுவும் நவீன முறையில் ரயிலில் துளையிட்டு கொள்ளையடித்தது இதுவே முதல்முறை.
ஓடும் ரயிலில் பயணிகளிடம் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனையே ரயில்வே துறையும், காவல்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும். இந்நிலையில் தற்போது நடந்திருக்கின்ற ரயில் கொள்ளை சம்பவத்தினால் பொது மக்கள் ரயிலில் பயணம் செய்வதற்கும், அவர்களது பொருட்களை அனுப்புவதற்கும் தயங்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய ரயில்வே அமைச்சகம், ரயில்வே துறை, ரயில்வே காவல்துறை இணைந்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து ரயில் பயணிகள், அவர்கள் கொண்டுசெல்லும் பொருட்கள், சரக்குகள் போன்றவற்றிற்கு உரிய முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
ரயில் நிலையங்களையும், ரயிலில் பயணிகளை வழி அனுப்ப வருபவர்களையும், ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய ரயில்வே துறையின் செயல்பாடாக இருக்க வேண்டும்.
தற்போது நடைபெற்ற ரயில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய செயல்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.