

ஊத்தங்கரை பகுதியில் நிலவும் கடும் வறட்சியால், ஒரு குடம் தண்ணீர் பிடிக்க 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் படப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் காளிகோயில் புதுக்காடு, வீரப்பன் கொட்டாய், ஓம்சக்தி நகர். இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மக்களின் குடிநீர் தேவையை இப்பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணறு களும், ஆழ்துளை கிணறுகள், கைபம்புகளும் பூர்த்தி செய்து வந்தன.
தற்போது வறட்சியால் விவசாய கிணற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது. ஆழ்துளை மின்மோட்டார்களில் பழுது ஏற்பட்டு சீர்படுத்தப்படாமல் உள்ளதால், இப்பகுதி மக்கள் கைபம்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தண்ணீர் தேடி தினமும் 2 கி.மீ நடந்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘‘தண்ணீர் வற்றியதால், கைபம்பில் ஒரு குடம் தண்ணீர் எடுக்க 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சிறுவர்கள், பெண்கள் தண்ணீர் எடுத்து வர கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பழுதான மின்மோட்டார்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றனர்.
படப்பள்ளி ஊராட்சி காளிகோயில், புதுக்காடு பகுதியில் தண்ணீருக்காக ஆழ்துளை கைபம்பு அருகே காத்திருக்கும் மக்கள்.