Published : 12 Apr 2017 09:49 AM
Last Updated : 12 Apr 2017 09:49 AM

ரத்த உறைவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவன் ரயில் இன்ஜினை இயக்கி அசத்தல்: ஆசையை நிறைவேற்றி வைத்தார் ரயில்வே அமைச்சர்

ரத்த உறைவு குறைபாட்டால் பாதிக் கப்பட்டுள்ள பள்ளி சிறுவனின் ஆசையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிறைவேற்றி வைத்தார். சென்னை ராயபுரத்தில் அதிகாரிகள் பாதுகாப்புடன் அந்த சிறுவன் ரயில் இன்ஜினை இயக்கி அசத்தினான்.

ஒவ்வொருவருக்கும் சிறுவய தில் ஏற்படும் கனவுகள் பெரியது. அதிலும், சிலர் தனது லட்சியப் புதையலைத் தேடி அடைவதற்கு மன உறுதியுடன் போராடுகின்றனர். இதேபோன்ற சிந்தனையை கொண்ட சிறுவன்தான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வசித்து வரும் டி.கண்ணன்(14) என்ற 8-ம் வகுப்பு மாணவன்.

கண்ணனுக்கு பிறக்கும்போதே ரத்த உறைவு குறைபாடு இருந்துள் ளது. இதனால், தேவைப்படும் போது சிகிச்சை பெற்று வருகிறான். ரயில் பயணத்தில் இருந்த ஈடுபாடு காரணமாக, தான் எதிர்காலத்தில் ரயில் பைலட் (ஓட்டுநர்) ஆக வேண்டுமென்பதே கண்ணனின் லட்சியம். இதற்காக பள்ளியில் படிக்கும்போதே எப்படியாவது ஒருமுறையாவது ரயில் இன்ஜினை ஓட்டிப் பார்க்க வேண்டுமென ஆர்வமாக இருந்தான்.

இதற்காக கண்ணனின் உறவினர்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இறுதியாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் அனுமதி பெற்று, பின்னர், ரயில்வே அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் ஆலோசனையுடன் மார்ச் 20-ம் தேதி சென்னை ராயபுரத்தில் விரைவு ரயில் இன்ஜினை இயக்கி அசத்தியுள்ளான் கண்ணன்.

ரயில் பைலட்

இந்த நிகழ்ச்சி கண்ணனின் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி யாகிவிட்டது. இதுகுறித்து கண்ணன் கூறியதாவது: ‘‘நான் செஞ்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை தாகூர், அரசு மருத்துவர். அம்மா பத்மபிரியா. நாங்கள் சென்னை ஆவடியில் வசித்து வந்தோம். என் தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக தற்போது செஞ்சியில் வசித்து வருகிறோம்.

நான் சிறுவயதில் இருந்தே அதிக அளவில் ரயிலில் பயணம் செய்துள்ளேன். ரயில்களில் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், நான் படித்து ரயில் பைலட் ஆக விரும்புகிறேன். இதற்காக மற்ற வர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு வருகிறேன். பள்ளியில் படிக்கும்போதே எப்படியாவது ஒருமுறை ரயிலை கொஞ்சம் தூரமாவது ஓட்டிப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டேன். இதற்காக ரயில்வே அமைச்சரிடம் ‘விஷ் ஃபவுண்டேஷன்’ மூலம் அனுமதி கேட்டோம்.

1 கி.மீ. தூரப் பயணம்

ராயபுரத்தில் உள்ள ரயில் பணிமனையில் கடந்த மார்ச் 20-ம் தேதி அங்குள்ள ரயில்வே அதிகாரிகள் இன்ஜின்கள் இயக்கம், பாதுகாப்பு குறித்து எனக்கு ஆலோசனைகளை வழங்கினர். எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால், உடனுக்குடன் புரிந்து கொண்டேன். அதன்பிறகு, ரயில்வே அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கு ரயில் இன்ஜினை இயக்கினேன். இந்த அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. இதற்கு அனுமதி அளித்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றான் கண்ணன்.

பள்ளியில் படிக்கும்போதே...

சிறுவனின் தாயார் பத்மபிரியா கூறுகையில், ‘‘என் மகனுக்கு பிறந் ததில் இருந்து ரத்த உறைவு குறைபாடு பிரச்சினை இருக்கிறது. தற்போது, தேவைப்படும்போது அவனுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். பள்ளியில் படிக்கும் போதே எப்படியாவது ரயில் இன்ஜின் இயக்க வேண்டுமென ஆர்வமாக இருந்தான்.

இதற்காக ரயில்வே அமைச்சரிடம் உரிய அனுமதி பெற்று, தற்போது ரயில் இன்ஜினை கண்ணன் இயக்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் விருப்பப்படி, எதிர்காலத்தில் ரயில் பைலட் ஆக வருவதற்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்’’ என்றார்.

அதிகாரிகள் பாதுகாப்புடன் விரைவு ரயிலை இயக்கும் சிறுவன் கண்ணன்.

ரயில்வே அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கு ரயில் இன்ஜினை இயக்கினேன். இந்த அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x