Published : 07 Feb 2017 06:59 PM
Last Updated : 07 Feb 2017 06:59 PM

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழர்கள் இடம்பெற வேண்டும்: வாசன்

உச்ச நீதிமன்றத்தில் இன்னும் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில் அந்தப் பட்டியலில் தமிழக நீதிபதிகளின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் தொய்வின்றி செயல்பட நீதிபதிகளும், நீதிமன்ற அலுவலர்களும் போதுமான அளவில் நீதிமன்றங்களில் பணியில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடையாமல் விரைந்து தீர்ப்புகள் வெளிவரும்.

எனவே நம் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதிக்கான பணியிடங்களையும், அலுவலர்களையும் காலம் தாழ்த்தாமல் நிரப்ப வேண்டியது மத்திய அரசின் கடமை.

மூத்த நீதிபதிகள் குழு என்ற கொலீஜியம் முறையில் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளுக்கு ஏற்கெனவே பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 2016 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பிறகு இதுவரையில் தமிழகத்தைச் சேர்ந்த வேறு எந்த ஒரு நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் 8 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட வேண்டும். இந்நிலையில் மூத்த நீதிபதிகள் கொண்ட குழு (கொலீஜியம்) தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலத்தைச் சேர்ந்த 5 நீதிபதிகளை தேர்ந்தெடுத்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

குறிப்பாக நீதிமன்றங்களில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் தமிழக நீதிபதிகள்.

இத்தகைய புகழுக்கும், பெருமைக்கும் உரிய தமிழக நீதிபதிகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக நீதிபதிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

குறிப்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி, முன்னோடியாக விளங்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் பெயர் தற்போது பரிந்துரைக்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

எனவே உச்ச நீதிமன்றத்தில் இன்னும் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில் அந்த பட்டியலில் தமிழக நீதிபதிகளின் பெயர்கள் இடம்பெற மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவும், மத்திய சட்ட அமைச்சகமும் ஒருங்கிணைந்து முடிவு எடுக்க வேண்டும். அதன் மூலம் தற்போது உச்சநீதிமன்றத்தில் மீதமுள்ள 3 நீதிபதிகளுக்கான காலியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியும், திறமையும், பணிமூப்பும் உடைய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் தமாகா வலியுறுத்துகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதிகளையும், அலுவலர்களையும் காலம்தாழ்தாமல் நிரப்ப வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x