Published : 28 Jan 2014 13:57 pm

Updated : 06 Jun 2017 18:53 pm

 

Published : 28 Jan 2014 01:57 PM
Last Updated : 06 Jun 2017 06:53 PM

ஸ்டாலின் பற்றி அழகிரி சொன்னதைக் கேட்டு என் இதயமே நின்றுவிடும் போல இருந்தது: திமுக தலைவர் கருணாநிதி உருக்கமான பேட்டி

மு.க.ஸ்டாலினை பற்றி மு.க.அழகிரி வெறுக்கத்தக்க வகையில் பேசியதைத் தன்னால் பொறுத்தக்கொள்ள முடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக கூறினார்.

திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?

பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளைப் பற்றி அறிவிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்தோ அல்லது விமர்சித்தோ அல்லது கட்டுப்படாமலோ கழகத்திலே உள்ள யாரும்; முக்கியமாக பொறுப்பிலே உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை.

ஆனால் கடந்த சில மாதங்களாக மு.க.அழகிரி, தான் கழக உறுப்பினர் என்பதை மறந்து விட்டு, இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பிலே இருப்பவர் என்பதையும் மறந்து விட்டு - பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.

அண்மையில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியைக் கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள். அவருக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

அதற்கெல்லாம் உச்ச கட்டமாக கடந்த 24 ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார்.

அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.

நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கா கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவர் வெளியிலே வந்து சொல்கிற குற்றச்சாட்டு கட்சியிலே சில பேர் மீது, குறிப்பாக அவருக்கு வேண்டிய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்ற குற்றச்சாட்டாகும். கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.

அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அது கழகத்தின் சட்டதிட்டப்படி செய்யப்பட்ட ஒன்றாகும். அதற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ விளக்கமளித்து பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர தனக்கு வேண்டிய பழைய நண்பர் கூட்டத்தை வைத்துக் கொண்டு சுவரொட்டிகளை ஒட்டுவதும், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதும் எப்படி முறையாகும்?

என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

இந்த இயக்கம் அண்ணா காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ இது போன்ற சோதனைகளையெல்லாம் சந்தித்து விட்டு, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கமாகும். தமிழ் மக்கள் வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டுமென்பதற்காக என்னுடைய 14வது வயது முதல் இந்த 91வது வயது வரையில் பல தியாகங்களைச் செய்து அடக்கு முறைகளை ஏற்று, பெரியாரும், அண்ணாவும் உருவாக்கித் தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறவன் என்ற முறையில் இந்த உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே பத்திரிகையாளர்களாகிய உங்கள் மூலமாக இந்தச் செய்திகளையெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகிரி மன்னிப்பு கோரினால் தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா?

இந்தக் கேள்வியை நீங்கள் அவரைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

அழகிரி ஏதோ முறைகேடுகள் நடந்ததைப் பற்றி குறிப்பிட்டு அதைக் கேட்பதற்காகத் தான் உங்களைச் சந்தித்ததாகச் சொல்கிறாரே?

எந்த முறைகேடு பற்றியும் எனக்குத் தெரியாது.

காங்கிரஸ் கட்சி உங்களிடம் கூட்டணி வைக்க முன் வந்தால் உங்கள் கருத்து என்ன?

காங்கிரஸ் கட்சி எங்களைத் தேடி வருவதாக நான் ஜம்பம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருவரை யொருவர் அரவணைத்து அணி சேருவது அந்தந்த கட்சிகளுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் நடைபெற வேண்டிய விஷயங்களாகும்.

தே.மு.தி.க.வோடு தி.மு.க. கூட்டணி சேருவது பற்றி?

நாங்கள் முதலிலே அதைப் பற்றிச் சொல்லி விட்டோம். அதற்கு மேல் தொடர வேண்டியவர்கள் அவர்களே தவிர நாங்கள் அல்ல.


மு.க.அழகிரிகருணாநிதி விளக்கம்அழகிரி நீக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x