Published : 16 Nov 2014 08:37 AM
Last Updated : 16 Nov 2014 08:37 AM

வண்டலூர் பூங்காவில் தப்பிய புலிகளால் தனிப்படையினர் தவிப்பு: விடிய விடிய நடந்த தேடுதல் பணி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகள் அகழி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சென்னை வண்டலூர் பூங்கா 602 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. அவற்றைப் பார்வையிட செவ்வாய்க்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சிங்கம், யானை, புலி உட்பட பல விலங்குகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பூங்காவில் புலிகள் இருப்பிட அகழி சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் காலையில் இடிந்தது.

புலிகளை காட்ட மறுப்பது ஏன்?

இதையடுத்து, 4 புலிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டதாகவும் இன்னொரு புலியை பிடிக்கும் பணி நடந்துவருவதாகவும் பூங்கா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பிடிபட்ட புலிகளை காட்ட பூங்கா நிர்வாகம் மறுத்துவிட்டது. இதுவும் சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

விடிய விடிய சோதனை

இருப்பிடப் பகுதியில் புலிகளை தேடும் பணி விடிய விடிய நடந்தது. இதில் வனத்துறை அதிகாரிகள், காவல் துறையினர், பூங்காவில் விலங்குகளை பரா மரிக்கும் ஊழியர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். பூங்காவைச் சுற்றி யுள்ள அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சம்பவம் பற்றி பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி கூறியதாவது:

சுவர் வரை சென்ற புலி

சுற்றுச்சுவர் இடிந்த பகுதியில் புலிகளின் கால் தடங்கள் ஏதேனும் பதிந்திருக்கிறதா என ஆய்வு செய்தோம். ஒரு புலி மட்டும் இடிந்த பகுதியில் பாதி வரை வந்து திரும்பிச் சென்றதற்கான கால் தடங்கள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதி யில் போடப்பட்ட இறைச்சித் துண்டு களை புலி தின்றிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் 5-வது புலி வெளியேறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதை பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தயார் நிலையில் டாக்டர், ஆம்புலன்ஸ்

காணாமல் போன புலியை தேடும் பணியில் ஒரு வனச்சரகர் தலைமையில் பூங்காவில் விலங்குகளை பராமரிக்கும் ஊழியர்கள் 25 பேர் ஈடுபட்டுள்ளனர். பிடிபடும் புலியை பரிசோதிக்க கால்நடை மருத்துவர் ஒருவரும் தயார் நிலையில் உள்ளார். புலியை பிடிக்கும்போது காயம் ஏதேனும் ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உறுதியற்ற சுற்றுச்சுவர்

ஆபத்தான விலங்குகள் அனைத்தும் அகழி அமைக்கப்பட்ட வாழிடத்தில்தான் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம், அகழி சுற்றுச்சுவரின் உறுதித் தன்மையை பூங்கா நிர்வாகம் இதுவரை ஆய்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க பூங்கா அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மறக்க முடியாத டெல்லி சம்பவம்

டெல்லி விலங்கியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து தவறி அகழிக்குள் விழுந்த வாலிபரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்ற நிலையில், தற்போது வண்டலூர் புலி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

பகலில் ரவுண்டு.. இரவில் கூண்டு

இங்கு மொத்தம் 5 புலிகள் உள்ளன. புலிகளுக்கான வாழிடப் பகுதியில் பிரத்தியேக கூண்டுகளும் இருக்கும். வழக்கமாக, தினமும் காலை 9 மணிக்கு கூண்டில் இருந்து பொதுமக்கள் பார்வைக்காக புலிகள் திறந்துவிடப்படும். புலிகள் வெளியே சென்று அகழிக்கு நடுவே மரங்கள், முட்புதர்கள் மத்தியில் மாலை வரை சுற்றித் திரியும்.

மாலை 4 முதல் 5 மணிக்குள்ளாக புலிகளுக்கு இறைச்சி வழங்கப்படும். இறைச்சி வாகனச் சத்தம் கேட்டதுமே புலிகள் எங்கிருந்தாலும் கூண்டுக்கு வந்துவிடும். அத்துடன் கூண்டுகள் அடைக்கப்படும். இப்பணிகளை பூங்கா ஊழியர்கள் மேற்கொள்வார்கள். தினமும் வனச்சரகர் பார்வையிட்டு, ஆவணத்தில் கையெழுத்திடுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x