

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது பல்வேறு பள்ளிகளில் மலைஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு அரசு நிர்ணயித்துள்ள விகிதாசாரத்தின் கீழ் இடஒதுக்கீடு செய்யப்படு வதில்லை என்று புகார்கள் வருகின்றன. எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசு, நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி களில் மேல்நிலை வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையின்போது குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக் கீட்டின் அடிப்படையில் கண்டிப் பாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் 30 சத வீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 18 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம், பொதுப்பிரிவினர் 31 சதவீதம் என்ற அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீடு குறித்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தைக் கூட்டி அறிவுரை வழங்க வேண்டும். இடஒதுக்கீட்டை மீறி அவர்கள் செயல்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் இதற் கென பதிவேடு ஒன்று ஆரம்பித்து அனைத்து விண்ணப்பங்களையும் பதிவு செய்து, தலைமை ஆசிரியர் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தி, அந்த விண்ணப்பங் களைப் பரிசீலித்து அரசு நிர்ண யித்துள்ள இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடைபெறு வதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை முறையாக நடைபெற்றுள்ளதை உறுதிப்படுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்பம் பெற்ற பிறகே மாணவர்கள் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அனைத்து ஆவணங் களையும் மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து பள்ளித் தலைமை ஆசிரியர், அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து இதுதொடர்பாக விரிவான அறிக்கையை வரும் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.