சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன்

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன்
Updated on
1 min read

சத்துணவு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு சார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதற்கு ஏதுவாகவும், அவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக 68,000 சத்துணவு மையங்களும், சுமார் 35,000 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. அதில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இத்திட்டத்தின் படி பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில், பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆனால், கடந்த பல வருடங்களாக தமிழக சத்துணவு மையங்களில் சுமார் 20 ஆயிரம் பணியிடங்களும், அங்கன்வாடி மையங்களில் சுமார் 23 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் பற்றாக்குறையினால் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உரிய நேரத்தில், உணவு தயார் செய்வதிலும், உணவு வழங்குவதிலும் தட்டுப்பாடும், காலதாமதமும் ஏற்படுகிறது. மேலும் ஊழியர்களின் பற்றாக்குறையால் ஏற்கெனவே பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு பணிச்சுமையும் ஏற்படுகிறது.

எனவே, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பதவி உயர்வு, அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியத்தோடு கூடிய சலுகைகள், ஓய்வூதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.

தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வருவதால் இக்கூட்டத்தொடரிலாவது சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

அதன் அடிப்படையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கிட முடியும். மேலும், அம்மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்கள் பொருளாதார சிக்கலில் இருந்து ஓரளவிற்கு விடுபட்டு வாழ வழி வகுக்கும்.

எனவே தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in