Published : 17 Dec 2013 07:41 PM
Last Updated : 17 Dec 2013 07:41 PM

கோவை: விதிமுறை மீறலில் மேலும் ஒரு காட்டு பங்களா?

நீர் ஓடைகளை ஆக்கிரமித்து கட்டியிருந்ததாகக் கூறி ஆலாந்துறை நாதே கவுண்டன்புதூரில் வனத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள சொகுசு மாளிகை இடிப்பு நடவடிக்கையை கோவை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நிறுவனம், நில அளவை செய்தபிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதே மலையோர கிராமத்தில் இந்த சொகுசு மாளிகைக்கு வடகிழக்கே இன்னொரு பங்களாவும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை விதிகளை மீறியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன்மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து நாதே கவுண்டன்புதூரை சேர்ந்த விவசாயிகள் கூறியது:

'எங்கள் கிராமத்தில் வனப் பகுதி ஓரத்தில் முதலாவதாக உருவான பங்களா இதுதான். 60 ஏக்கருக்கு மேலாக உள்ள விவசாய நிலங்களை பல்வேறு விவசாயிகளிடம் கோவையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வாங்கி, ஒரு பங்களாவை கட்டி நிலப்பகுதி முழுக்க மின்சார வேலி போட்டு முன் பக்கத்தில் ஊமைவிழிகள் படத்தில் வருவது போல் பிரம்மாண்டமான ஒரு வாயிற்கதவை அமைத்துள்ளனர். இந்த பங்களா தோட்டத்தின் மின்சாரத் தேவைக்காக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது. இதன் எல்லைக்குள் புறம்போக்கு நிலம் எவ்வளவு உள்ளது, எத்தனை நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டன என்பதெல்லாம் அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

ஆனைக்காடான இந்த இடத்தை மூலைக்காடு என்றுதான் அழைப்போம். இங்கு வேர்க்கடலை விளைச்சல் நன்றாக இருந்தது, யானைகள் நடமாட்டம் அதிகம். இரவு நேரத்தில் வரும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து அழித்ததில்லை.

ஆனால், இந்த கட்டிடம் கட்டப்பட்டு மின்வேலி போட்ட பிறகுதான் யானைகள் ஊருக்குள் வந்து, விவசாய நிலங்களை அழிக்க ஆரம்பித்தன. இங்கே 50 அடி அகல நீளத்தில் ஒரு பெரிய தொட்டி கட்டி, அதில் நீர் விட்டு உப்பு, புளி போன்றவைகள் போட்டு வைக்கின்றனர். இந்த நீரை குடிக்க யானைகள், வனவிலங்குகள் வருகின்றன. அதை, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துச் செல்கின்றனர்.

உப்பு நீரை ருசிபார்த்த யானைகளும், பிற விலங்குகளும் ஊருக்குள்ளும் வர ஆரம்பித்துவிட்டன. இது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடமும், வனத்துறை ஊழியர்களிடமும் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர். இந்த பங்களா, நாதேகவுண்டன்புதூரில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அடர்ந்த காட்டுப் பாதையில் உள்ளது. பங்களா ஓரமாகவே யானைகளுக்கான அகழி பல கி.மீ. தூரம் வெட்டப்பட்டுள்ளது.

அங்குள்ள சில ஆடு மேய்ப்பவர்களிடம் பேசியபோது ''இங்கே ஒரு வாட்ச்மேன் மட்டும் இருப்பார். அவர் எப்போது இங்கே வருவார், என்ன செய்வார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இது ஒரு மர்ம பங்களா என்றனர். இது பற்றி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கவனத்திற்கு கொண்டுவந்தபோது, வனத்துறை அதிகாரிகள் சிலரை அழைத்து அந்த பங்களா குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x