

சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் க.பொன்முடி ‘‘சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்த தமிழக சிஆர்பிஎப் வீரர் சங்கரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணியும், அவர்கள் குடியிருக்க வீடும் வழங்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில், இறந்த மத்திய ரிசர்வ் படைவீரர் சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ராணுவீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட துணை ராணுவப்படை வீரர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படை பணி வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது. அதன் அடிப்படையில், சங்கரின் வாரிசுக்கும் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘சங்கரின் மனைவி மற்றும் உறவினர் களின் கோரிக்கையை ஏற்று, பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.