

வறுமை உள்ளிட்ட காரணங்களால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட தமிழக மற்றும் பிற மாநிலப் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு.
அப்பெண்களின் மறுவாழ்வுக்கு வழிவகுப்பதுடன், பிற மாநில பெண்களை அவர்களது குடும்பத் தினரோடு சேர்த்து வைக்க எல்லை தாண்டியும் உதவி வருகிறது.
வறுமை காரணமாக பாலியல் தொழிலில் பெண்கள் சிக்கிக்கொள் வதுண்டு. ஏமாற்றி இத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களும் இருக்கிறார்கள். இதன் காரணமாக குடும்பத்தினராலும், சமூகத்தாலும் ஒதுக்கி வைக்கப்படும் பெண்கள் செய்வதறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.
பாலியல் தொழில் செய்ததாக காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் பெண்கள் பின்னர் சிறையில் அடைக்கப்படுவதுதான் கடந்த 10 ஆண்டுகள் வரை இருந்த நடைமுறை.
அதன் பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பெண்கள் கைது செய்யப்படும்போது அவர் களை குற்றவாளி என கருதாமல் பாதிக்கப்பட்டவர்களாக கருத வேண்டும் என்று 2006-ம் ஆண்டில் நடந்த வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா உத்தரவிட்டார். அதே நேரத்தில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவோரை குற்றவாளிகளாக கருதி சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து பாலியல் தொழில் செய்ததாக கைதாகும் பெண்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு, அவர்களது மறுவாழ்வுக்கு வழிவகுக்கப்பட் டது. கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலும் இது போன்ற அரசு கண்காணிப்பு இல்லங்கள் உள்ளன.
பாலியல் தொழில் செய்ததாக கைதாகும் பெண்களை நீதிமன்றத் துக்கு அழைத்து வரும்போது நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்ட தால், நீதிபதி காணொலி மூலம் அரசு கண்காணிப்பு இல்லத்தில் உள்ள பெண்களிடம் விசாரணை நடத்தும் முறை கொண்டு வரப் பட்டது.
ஆந்திரம், கர்நாடகம், மகா ராஷ்டிரம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 50 பெண்களும் பாலியல் தொழில் செய்ததாக சென்னையில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் அடைக் கப்பட்டுள்ளனர். அவர்களின் முகவரிகளை பெற்று சிபிசிஐடி போலீசார் மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த முறை யால் எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. எனவே அப்பெண் களுக்கு உதவிக்கரம் நீட்ட தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு முன்வந்தது என்கிறார் இக்குழுவின் உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன்.
அரசு கண்காணிப்பு இல்லத்தில் இருக்கும் பெண்களின் முகவரியை வாங்கி, அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ அந்த மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவைத் தொடர்பு கொண்டு முகவரியைச் சரிபார்த்து, சிபிசிஐடி போலீஸ் மூலம் சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்பிறகு 90 நாட்கள் வரை அப்பெண்களின் நடவடிக்கையை கண்காணிக்கும் சட்டப்பணிகள் ஆணைக்குழு, தேவைப்பட்டால் சிறு கடன் வாங்கிக் கொடுத்து மறுவாழ்வுக்கும் வழிகாட்டுகிறது. இதனால் பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் திக்கு தெரியாமல் தவிக்கும் பெண்களைக் கையாள்வதில் இருந்து வந்த முறைகேடுகள் முற்றிலுமாக களையப்பட்டன.
சிலரை குடும்பத்தினர் சேர்த்துக்கொள்ளாவிட்டாலோ, முகவரி தவறாக இருந்தாலோ அப்பெண்களை அரசு கண்காணிப்பு இல்லத்திலே சிறிது காலம் தங்கவைத்து, அவர்களது மறுவாழ்வுக்கு வழிவகை செய்யப்படுகிறது. தையல், அழகுக்கலைப் பயிற்சி, கூடை முடைதல், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு போன்ற 11 வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்ட கர்ப்பிணி ஒருவர், அரசு கண்காணிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அவரது மறுவாழ்வுக்கு பெரிதும் உதவிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அப்போதைய உறுப்பினர் செயலரின் பெயரையே (நீதிபதி அக்பர் அலி) தனது குழந்தைக்கு சூட்டி, நன்றிக்கடன் செலுத்தினார் அப்பெண். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வே சட்டப்பணிகள் ஆணைக்குழு சாதனையின் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.