

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், படகு ஏரி, பூங்கா உள்ளிட்ட பகுதிகள் ‘வெறிச்’ என காணப்படுகின்றன.
நீலகிரிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்தாண்டு 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். கோடை சீசனான ஏப்ரல் முதல் ஜூன் வரை சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பின்னர், இரண்டாம் சீசனாக கருதப்படும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேனிலவு தம்பதிகள் மற்றும் பனிக்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக இருக்கும்.
தற்போது பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. குறைந்தபட்ச வெட்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. கூட்டம் இல்லாததால், பூங்காக்களில் கோடை சீசனுக்காக பூங்காக்களை தயார்ப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூங்காக்களில் உள்ள பூந்தோட்டங்களில் மண் சமன்படுத்தி, உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
உதகை தாவரவியல் பூங்காவில், வரும் 26ம் தேதி நடவு பணிகள் துவக்கப்படும் என, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் மணி தெரிவித்துள்ளார்.