Last Updated : 01 Mar, 2017 02:00 PM

 

Published : 01 Mar 2017 02:00 PM
Last Updated : 01 Mar 2017 02:00 PM

கடலூரில் ஓஎன்ஜிசி எடுக்கும் இயற்கை எரிவாயுவால் நிலத்தடி நீர் பாதிப்பு: கிராம மக்கள் புகார்

கடலூர் மாவட்டம் கீழூரில் ஓஎன்ஜிசி எடுக்கும் இயற்கை எரிவாயுவால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் கீழூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியகோயில்குப்பம் எனும் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் எரிவாயு கார்ப்ரேஷன் லிமிடெட் காவேரி அஸெட் ஆரம்ப எண்ணெய் உற்பத்தி நிலையம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெயால் அக்கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் கீழூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியகோயில்குப்பத்தில் கடந்த 1998-ம் ஆண்டு இளங்கோவன் என்பவரின் நிலத்தை, எண்ணெய் எடுப்பதாகக் கூறி சுமார் 6 ஏக்கர் நிலத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் வருடத்திற்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அடிப்படையில் குத்தகை எடுத்துள்ளனர். பின்னர் அகழ்வராய்ச்சி மேற்கொண்டு கடந்த 2014-ம் ஆண்டு முதல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்து, குறிஞ்சிப்பாடிக்கு அருகிலுள்ள பெத்தநாயக்கன்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு குழாய் மூலம் வாயுவை விற்பனை செய்துவருகின்றனர்.

15 தினங்களுக்கு ஒருமுறை எண்ணெய் லாரியில் எடுத்துச் செல்லப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணெய் நிறுவனம் செயல்படத் துவங்கியதிலிருந்து தங்கள் பகுதியில் குடிநீரின் தன்மை மாறியுள்ளதோடு, மஞ்சள் நிறத்திலும், அவ்வப்போது எண்ணெய் கலந்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். எண்ணெய் நிறுவனம் பயன்படுத்திய வேதியியல் வெடிபொருளால் பெரியகோயில் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் என்ற விவசாயின் ஆழ்துளைக் கிணறு சேதமடைந்துவிட்டதாகவும், அதை சீரமைக்கக் கூட ஒஎன்ஜிசி நிறுவனத்தினர் முன்வரவில்லை என்றக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதேகிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் கூறுகையில், "தண்ணீர் சுவை மாறிவிட்டது. சில நேரங்களில் குடிநீரில் எண்ணெய் படலம் காணப்படும். இதுகுறித்து புகார் கூறியும், யாரும் கண்டுகொள்ளவில்லை"என்றார்.

இதேபோன்று மஞ்சுளா என்ற பெண் கூறுகையில், "அந்த நிறுவனத்தைப் பற்றி எங்களுக்கு தெரியாது. ஊரில் உள்ள ஆண்களுக்கு தெரியும் என்று இருந்துவிட்டோம்,. தற்போது தான் தெரிகிறது அதன் விபரீதம் குறித்து. எனவே அரசாங்கமா பார்த்து எங்களுக்கு நல்லது செய்யனும்" என்றார்.

நிலத்தைக் குத்தகைக்கு விட்ட நில உரிமையாளர் இளங்கோவனிடம் இது தொடர்பாக கேட்டபோது, "அப்போது இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எண்ணெய் எடுக்கப்போகிறோம் என்று கூறி தான் ஒப்பந்தம் செய்தார்கள். முதலில் 10 ஆண்டுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினர். தற்போது தான் அந்தத் தொகையை உயர்த்தி ரூ.60 ஆயிரம் வரை வழங்குகின்றனர். ஒருசில பகுதிகள் தண்ணீர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கலியன் என்ற விவசாயி போட்ட ஆழ்துளைக் கிணறு சேதமடைந்துள்ளது. இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மேலும் சில விளைநிலங்களை ஒஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் அதற்குண்டான தொகையை வழங்கவில்லை" என்றார்.

இதேகிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்ற விவசாயி கூறுகையில், "இந்த நிறுவனம் எந்த எண்ணெய் எடுக்கிறது என்ற விபரம் எங்களுக்குத் தெரியாது. மேலும் இதன் விபரீதம் பற்றியும் எங்களுக்குத் தெரியாத நிலையில் நிலத்தை குத்தகைக்கு விட்டோம். தற்போது தான் அதன் முழு விபரமும் தெரியவருகிறது. பெரியகோயில்குப்பம் கிராமத்திலிருந்து, பெத்தநாயக்கன் குப்பம் வரை சுமார் 12 கி.மீ தூரம் குழாய்கள்

பதித்து எரிவாயு கொண்டுசெல்லப்படுகிறது. இந்தக் குழாய்கள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலப் பகுதிகள் வழியாகத் தான் கொண்டு செல்லப்படுகிறது. ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை"என்றார்.

பெரியகோயில்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் நிர்வாகி தனசேகர் கூறும்போது, "ஒஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதாக் கூறிதான் நிலத்தைக் கையகப்படுத்தினர். இதன் முழுவிபரம் கிராம மக்களுக்குத் தெரியாது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதுபற்றி கிராம மக்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறதா அல்லது மீத்தேன் எடுக்கப்படுகிறதா என்ற எந்த விபரமும் எங்களுக்குத் தெரியாது. குழாய் வழியாக கேஸ் போவதும், 15 தினங்களுக்கு ஒருமுறை லாரியில் எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும். மற்றபடி எல்லாமே மர்மம் தான். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டத்திற்குப் பிறகு தான் இதன் விளவுகளை பற்றி அறிந்துள்ளோம். இனி தான் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றார்.

இது தொடர்பாக காரைக்கால் ஒஎன்ஜிசி நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் நாராயணன் கூறும்போது, "இந்த இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதை சில புவியியல் அமைப்பு நிபுணர்களே தெளிவுபடுத்திய பின்னரும் இதுகுறித்த குழப்பம் நீடிப்பது தேவையற்றது.விளை நிலங்களோ, நிலத்தடி நீரோ பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. கீழூரில் இயங்கும் இயற்கை எரிவாயு நிறுவனத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை" என்றார்.

நெய்வேலியைச் சேர்ந்த நிலயியல் துறை பொறியாளர் ராஜரத்னம் கூறுகையில், "இயற்கை எரிவாயு என்றாலே மீத்தேன், புரப்பேன், ஹெட்ரோ கார்பன் என அனைத்தையும் உள்ளடக்கியவை தான். அனைத்தும் நிலத்தடி நீரைக் கடந்து தான் எடுக்கப்படுகிறது. எனவே நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கான வாய்ப்பு ஒருபுறம் என்றாலும், பூமிக்கடியில் ஏற்படும் விரிசல்கள் ஆபத்தானவை. கீழூரில் எடுக்கப்படும் எரிவாயு தன்மைக் குறித்து தனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், "விவசாயிகளின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை மூளைச் சலவை செய்து விளைநிலப்பகுதியில் எண்ணெய் நிறுவனங்களை நிறுவியது தவறானது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டு விவசாய நிலங்களை மீட்டு, விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, அந்த நிறுவனத்தை அங்கிருந்து அகற்ற போராட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்" என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x