

கடுமையான வறட்சியால், விதைக்காக சேமித்து வைத்திருந்த பயறு வகைகள் மற்றும் நவதானியங்களையும் விற்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடியோடு பொய்த்துபோனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மானாவாரி சாகுபடி செய்யும் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கிட்டங்கிகளில் சேமிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதிகளில் நெல், வாழை சாகுபடியும், பிற பகுதிகளில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், எள், கொத்தமல்லி, சோளம், குதிரைவாலி, மிளகாய் போன்ற சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிணற்று பாசனம் மூலம் சில கிராமங்களில் நவதானியம் மற்றும் பயறு வகைகள் சிறிதளவு விளைந்துள்ளன.
கொத்தமல்லிக்கு கடந்த ஆண்டு உரிய விலை இல்லாததால் சில கிராமங்களில் விவசாயிகளிடம் கொத்தமல்லி இன்னும் இருப்பு உள்ளது. இதனைத் தவிர இந்த ஆண்டு விதைக்கு தேவையான உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றை, கிட்டங்கிகளில் விவசாயிகள் சேமித்து வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, வேலையின்மை போன்ற காரணங்களால் சேமித்து வைத்துள்ள பயறு வகைகள், நவதானியங்களை குடும்ப தேவைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
விலை சரிவு
இதுகுறித்து எட்டயபுரம் அருகே யுள்ள அயன்வடமலாபுரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது:
குடும்ப தேவைக்காக விவசாயிகள் சேமித்து வைத்துள்ள பயறு வகைகள், நவதானியங்கள் போன்றவற்றை தற்போது விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், பயறு வகைகளான உளுந்து, பாசி மற்றும் நவதானியங்களின் விலை சரிவாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 40 கிலோ கொத்தமல்லி மூட்டை ரூ.4,500, குவிண்டால் உளுந்து ரூ.12,000, சிவப்பு சோளம் ரூ.4,000, குதிரைவாலி ரூ.4,000 என்ற விலையில் இருந்தது.
தற்போது கடும் வறட்சியிலும் விளை பொருட்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு குவிண்டால் உளுந்து ரூ.6,000, குதிரைவாலி ரூ.2,000, கொத்தமல்லி 40 கிலோ மூட்டை ரூ.3,200 என்ற நிலையில் உள்ளது.
இறக்குமதியால் பாதிப்பு
தற்போது, ரஷ்யா போன்ற பல வெளிநாடுகளில் இருந்து மொத்த வியாபாரிகளால் கொத்தமல்லி இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி, கோவில்பட்டி கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்தும் கொத்தமல்லி கொண்டுவரப்பட்டுள்ளது. இவை 40 கிலோ மூட்டை ரூ.2,500 என, விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இங்கு விளையும் பொருட்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
அரசே கொள்முதல்
வரும் காலங்களிலும் இதுபோன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். வெளிநாடுகளில் விவசாய விளை பொருட்களுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்து, அரசே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்கிறது. மேலும், நவீன தொழில்நுட்பத்தில் பல மடங்கு விளைச்சலை அந்நாட்டு அரசுகள் அதிகப்படுத்தியுள்ளன.
எனவே, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், விலையை நிர்ணயம் செய்து அரசே விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார் அவர்.