

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 அணைகளிலும் வெறும் 8.5 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. கிணறுகள், 2,518 குளங்களும் வறண்டதால் மே மாதம் இறுதி வரை குடிநீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளில் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 13,765.5 மில்லியன் கனஅடியாகும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 5,140.44 மில்லியன் கனஅடி தண்ணீர் அணைகளில் இருந்தது. ஆனால் தற்போது 1,163.64 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 11 அணைகளிலும் மொத்தம் 37.3 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. ஆனால், தற்போது 8.5 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
அணைகளில் நீர் இருப்பு
அணைகளில் நேற்றைய நீர் மட்டம் விபரம்: (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம்)
பாபநாசம்- 39.95 அடி (78.09 அடி), சேர்வலாறு- 16.4 அடி ( 90.35 அடி), மணிமுத்தாறு- 44.21 (85.45), கடனா- 52.9 (33.6), ராமநதி- 37.75 (25), கருப்பாநதி- 38.33 (24.94), குண்டாறு- 19.75 (11.8 ), அடவிநயினார்- 46 (55), வடக்கு பச்சையாறு- 3.25 (25.25), கொடுமுடியாறு- 4.5 (2.5), நம்பியாறு- 7.83 (11.01).
மழையளவு
மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. ஆகும், கடந்த 2015-ம் ஆண்டில் 1,421.07 மி.மீ. மழை பெறப்பட்டிருந்தது. இது இயல்பான மழையளவைவிட 74.4 சதவீதம் அதிகமாகும். கடந்த 2016-ம் ஆண்டில் 396.88 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டிருந்தது. இது இயல்பைவிட 51.3 சதவீதம் குறைவாகும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பமான மழை அளவு 485.8 மிமீ. கடந்த ஆண்டு இப்பருவத்தில் 182.7 மி.மீ. மழை பெறப்பட்டிருந்தது. இது இயல்பை விட 62.19 சதவீதம் குறைவாகும். மார்ச் மாதம் இயல்பான மழையளவு 41.3 மி.மீ. ஆகும். ஆனால் 58.69 மி.மீ. மழை மட்டுமே பதிவானது. ஏப்ரல் மாதம் இயல்பான மழையளவு 59.8 மி.மீ. ஆகும். ஆனால், இதுவரை 15.52 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் முடிய 4 மாதங்களில் இயல்பான மழையளவு 181.5 மி.மீ.க்கு பதில் இதுவரை 143.35 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டிருக்கிறது.
2,518 குளங்கள் வறண்டன
மாவட்டத்திலுள்ள 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் 2,518 குளங்கள் வறண்டுவிட்டன. இதேபோல், பெரும்பாலான கிணறுகள் வறண்டுள்ள நிலையில், ஒருசில வட்டாரங்களில் இருக்கும் கிணறுகளில் சராசரியாக 1 மணி முதல் 2 மணி நேரம் வரை பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.
அணைகளில் இருக்கும் தண்ணீரை வைத்து மே மாத இறுதி வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது கடினம். 2,518 குளங்கள் மற்றும் கிணறுகளும் வறண்டு விட்டதால் ஆழ்துளை கிணறுகளிலும் தேவைக்கேற்ப தண்ணீர் இருக்காது. இதனால் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது மிகுந்த சவாலாக இருக்கும்.