

திண்டுக்கல் தொகுதியில் வரவேற்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வராததால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தனை ஆதரித்து செய்யவிருந்த பிரச்சாரத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், கே.வி.தங்கபாலு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஏப். 8-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திண்டுக்கல் தொகுதியில் புதன்கிழமை கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். தேனியில் புதன்கிழமை காலை வேட்பாளர் ஜே.எம்.ஆரூணை ஆதரித்து பிரச்சாரம் செய்த தங்கபாலு, மாலை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மணிக்கூண்டு ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
அதற்காக, உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையம் மூலம் தேர்தல் அலுவலகத்தில் முன்கூட்டியே மனு கொடுத்து அனுமதியும் வாங்கியிருந்தனர். ஆனால், பிரச்சாரத்துக்கு வரவேண்டிய கே.வி.தங்கபாலு, கடைசி நேரத்தில் திண்டுக்கல் பிரச்சாரத்தை ரத்து செய்து மதுரைக்குச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியில் ஒருதரப்பினர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில், வாசன் கோஷ்டியினர்தான் உள்ளனர். வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தனும் வாசன் கோஷ்யைச் சேர்ந்தவர்தான். அதனால், கே.வி.தங்கபாலு பிரச்சாரத்துக்கு திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. முந்தையநாள் ஜி.கே.வாசனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த நிர்வாகிகள் தங்கபாலுவுக்கு வரவேற்பு ஏற்பாடு செய்ய ஆர்வம் காட்டவில்லை.
அவரது பிரச்சாரத்துக்கு போதிய ஏற்பாடு செய்யவில்லை. அதனால், தங்க பாலு பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்றனர். மற்றொரு தரப்பினர் கூறுகையில், அவசரமாக அவர் வெளியூர் செல்ல வேண்டிய இருந்ததால் பிரச்சாரத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்றனர்.