சென்னையில் உருளைக் கிழங்கு விலை எகிறியது; வெங்காயத்துக்கு குறைந்தது

சென்னையில் உருளைக் கிழங்கு விலை எகிறியது; வெங்காயத்துக்கு குறைந்தது
Updated on
1 min read

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் நாளுக்கு நாள் விலை அதிகரித்த வெங்காயம், தற்போது விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் உருளைக் கிழங்கின் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க ஆலோசகர் வி.ஆர். சவுந்தரராஜன் தெரிவித்ததாவது: வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு, 80 லாரிகளில் வந்த வெங்காயம், சமீபகாலமாக 40 லாரிகள்தான் வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து 55 லாரிகள் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.

இதில், ஆந்திராவிலிருந்து வரும் 40 லாரி வெங்காயம் பெருமளவில், மழையினால் பாதிக்கப்பட்டது. எனவே, கடந்த வாரம் கிலோ ரூ.50 முதல் 70 வரை விற்ற வெங்காயம், தற்போது, ரூ.30 முதல் 50 வரை விற்கப்படுகிறது.

அதேநேரத்தில், வரத்து குறைவு மற்றும் தீபாவளி பண்டிகை, தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கின் விலை திடீரென அதிகரித்துள்ளது. எனவே கோயம்பேடு சந்தையில், கடந்த வாரம் கிலோ ரூ.18 முதல், 20 வரை விற்கப்பட்ட உருளைக்கிழங்கு தற்போது ரூ.25 க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளிலோ ரூ. 40 க்கு விற்கப்படுகிறது.

மேலும், கிலோ ரூ.50-க்கு விற்ற தக்காளி, மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் வருவதால், தற்போது விலை குறைந்து, கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in