

விதிகளை புறந்தள்ளி ஒருதலை பட்சமாக நடந்துகொள்வதால் பேரவைத் தலைவர் பதவியில் இருந்து பி.தனபாலை நீக்கக் கோரி தீர்மானம் கொண்டுவரும் நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து ஸ்டாலின் பேசியதாவது:
15-வது சட்டப்பேரவையில் பேரவைத் தலைவரை இருக்கை யில் அமர வைத்தபோது, எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை தருவோம் என உறுதியளித்தேன். ஆனால், எங்களின் ஒத்துழைப்பை பயன்படுத்திக்கொள்ள பேரவைத் தலைவர் தவறிவிட்டார் என்றே கருதுகிறேன். பேரவை விதிகளை புறந்தள்ளி ஒருதலைபட்சமாக அவர் நடந்துகொண்டார். ஆளுங் கட்சி உறுப்பினர்கள் திமுகவை வசைபாடி பேசினால் அதை நீக்க மறுக்கும் பேரவைத் தலைவர், பதிலுக்கு நாங்கள் ஏதாவது சொன்னால் உடனே நீக்கி விடுகிறார்.
விருப்பு, வெறுப்பில்லை
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இதற்கு உத்தரப்பிரதேசம், ஜார்க் கண்ட், உத்தராகண்ட் மாநிலங் களில் முன்னுதாரணம் உள்ளது. ஆனாலும் எங்களை குண்டுக் கட்டாக வெளியேற்றினர். விதி களுக்கு முரணாக, உள்நோக் கத்துடன் பேரவைத் தலைவர் நடந்துகொண்டார். பேரவைத் தலைவர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பு, வெறுப்புகள் கிடையாது.
திராவிட இயக்கத்தால் பயன் பெற்ற அவர், தாழ்த்தப்பட்டவன் என்பதால் என்னை இப்படி துன்புறுத்துகிறார்கள் என அரசியல் நோக்கத்துடன் கூறி யதை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. பேரவைத் தலைவர் பதவியில் பாரபட்சமாக விதி களை புறந்தள்ளி நடந்து கொண்டதால் அவர் பதவியில் நீடிப்பது சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கும், உறுப் பினர்களின் பேச்சுரிமைக்கும் குந்தகம் விளைவிக்கும், எனவே தான் இந்த தீர்மானத்தை கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. இதற்காக வருத்தம் அடைகிறேன்.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):
பேரவைத் தலைவர் தனபால் ஒரு பிரிவினருக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 110-வது விதியின்கீழ் மறைந்த முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அப் போது பாராட்டி பேச அனுமதித்த பேரவைத் தலைவர், விமர்சித்து பேச அனுமதிக்கவில்லை. விதி களின்படி யாருடைய பெயரையும் குறிப்பிடத் தடையில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒருவரின் பெயரை சொல்லவே கூடாது என தடை விதித்துள்ளார். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் சார்பில் ஆதரிக்கிறேன்.
கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்):
பேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டுமே உள்ளன. ஆனால், எங்கள் கட்சிக்கு மட்டும் அறை ஒதுக்கவில்லை. அறை ஒதுக்க ஜெயலலிதா முன்வந்தும் பேரவைத் தலைவர் ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது. விதி களின்படி பேரவைத் தலைவர் நடந்து கொள்ளவில்லை. ஆளுங் கட்சிக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறார். எனவே, ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்.
துரைமுருகன் (எதிர்க்கட்சி துணைத் தலைவர்):
எங்களின் எண்ணிக்கை எங்களுக்கு தெரி யும். பேரவைத் தலைவரை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் வெற்றி பெறும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால், நடுநிலையோடு நடந்து கொள்ள வில்லை என்பதை வெளிப்படுத்த வும், எதிர்க்கட்சிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.