

தமிழகத்தை பாதிக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை இடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் தடுப்பணையை உடனே இடிக்க வேண்டும். மேலும், நதி நீர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்.
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனை வசூலிக்க ஸ்டேட் வங்கி நிர்வாகம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் மூலம் பணம் கேட்கப்படுவதால், மாணவர்களின் பெற்றோர் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகின் றனர் எனவே, அந்த ஒப்பந்தத்தை உடன டியாக ரத்து செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலே நேர்மையாக நடைபெறாத நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற சாத்தியம் இல்லை. எனினும், மக்கள் நலக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும்.
புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல் படுத்த வேண்டும். சென்னையில் கொல்லப்பட்ட சுவாதியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இல்லை. வன்முறைதான் அதிகரித்துள்ளது என்றார்.