Published : 07 Mar 2017 12:06 PM
Last Updated : 07 Mar 2017 12:06 PM

அலங்காநல்லூரில் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ-க்கு ஆதரவும், எதிர்ப்பும்: போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 300 பேர் கைது

ஒன்றிய அலுவலக ஆய்வுக்காக வந்த ஓபிஎஸ் ஆதரவு சோழ வந்தான் எம்எல்ஏவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். அப்போது எம்எல்ஏவின் ஆதரவாளர்களும் திரண்டதால் அலங்காநல்லூரில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சோழவந்தான் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மாணிக்கம். இவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடந்த பின், சோழந்தானுக்கு வந்த மாணிக்கத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்தவாரம் அலங் காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு நடத்தினார். அப்போது மாணிக்கம் அழைக்கப்படவில்லை. மேலும், தொகுதியில் நடந்த அதிமுக கட்சி கூட்டத்தில் மாணிக்கத்தை கடுமையாக விமர்சித்து அமைச்சர் பேசினார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு ஆய்வு நடத்த எம்எல்ஏ மாணிக்கம் நேற்று வருவதையறிந்த அதிமுகவைச் சேர்ந்த அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், செல் லப்பாண்டி, முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, நகர செயலாளர் அழகுராஜா தலைமையிலான நிர்வாகிகள் ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

அப்போது, “எம்எல்ஏ.விடம் நாங்களும் கோரிக்கை மனு அளிப்போம். எங்களை புறக்கணித்துவிட்டு கட்சிக்கு எதிரானவர்களை உடன் வைத்தி ருப்பது ஏன்?” எனக் கேட்டு கோஷம் எழுப்பினர். எம்எல்ஏ அங்கு வந்தால் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் எம்எல்ஏ முனியாண்டி கோயில் அருகே காத்திருந்தார். அதிமுகவினர் கோரிக்கையை ஏற்க மறுத்த போலீஸார், அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இதையடுத்து, முனியாண்டி கோயிலில் இருந்து எம்எல்ஏ மாணிக்கத்தை மாலை, மரியாதையுடன் ஊர்வலமாக ஒன்றிய அலுவலகத்துக்கு அவரது ஆதரவாளர்கள் அழைத்து வந்தனர். அங்கு ஆணை யாளர் பிரகாஷ் உள்ளிட்ட அலு வலர்களிடம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். அமைச்சர் தலைமையிலான நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காதது ஏன் எனக் கேட்டதுடன், இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது என வும் கூறினார்.

பின்னர் மாணிக்கம் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியது: அமைச்சர் ஆர்.பி.உத யகுமார், மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரது துண்டு தலின்பேரில் ஆய்வுக்கு வரும் என்னை தடுக்கத் திட்டமிட்டனர்.

இதில், உள்ளூர் நிர்வாகிகள் மீது தவறு இல்லை. என்னை எதிர்க்க வேண்டும் என நினைத்தால், அமைச்சர் உதயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடட்டும். பல கிராமங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதேபோல் தெருவிளக்கு, சாலைவசதி, பொதுசுகாதாரம் மோசமாக உள் ளது.

மக்களுக்கு எதிரான அரசே தற்போது நடக்கிறது. குறைகளை தீர்க்காவிட்டால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

அலங்காநல்லூரில் அதிமு கவினர், எம்எல்ஏ ஆதரவாளர்களின் போட்டி அரசியலால் மோதல் ஏற்படாமல் தடுக்க, சமயநல்லூர் டிஎஸ்பி வனிதா தலைமையில் 100-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


மாணிக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x