

வழக்குகளில் சிக்கியுள்ள டிடிவி தினகரனை வெளியேற்ற சசிகலா குடும்பத்தினர் நாடகம் நடத்தி வருவதாகவும், அதற்காக அமைச்சர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என்றும் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் நடந்துவந்தன. இதுதொடர்பாக இரு அணிகளிலும் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பொன்னையன், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் வி.மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு நிருபர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது:
ஜெயலலிதாவின் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களை வெளிக் கொண்டுவர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிமுக வில் இருந்து வெளியேற்ற வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை தொடங்கினார்.
இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமானால், பொதுச்செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும். சசிகலா, தினகரன் இருவரிடம் இருந்தும் ராஜினாமா கடிதத்தை பெற வேண்டும். சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி அவர்களுடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவிப்பு வெளியிட வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
ஆனால், இவற்றை பற்றி எல்லாம் பேசாமல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பார் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஒரு பக்கம் கூறுகிறார். மறுபக்கம், நிதி அமைச்சர் டி.ஜெயக்குமாரோ, ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றியைக்கூட தனது வெற்றி என்றுதான் அவர் கூறுவார்’ என ஓபிஎஸ்ஸை கிண்டலடிக்கும் வகையில் பேசுகிறார்.
இவ்வாறு தான்தோன்றித் தனமாக பக்குவம் இல்லாமல், அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைத் தால் எப்படி பேச முடியும்? நாங்கள் முதல்வர் பதவி யையோ, பொதுச்செயலாளர் பதவியையோ கேட்கவில்லை. நாங்கள் 2 கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி வருகி றோம். அதை நிறைவேற்றி னால் மட்டுமே பேச்சு நடத்த முடியும்.
மக்கள் செல்வாக்கு இல்லாத இவர்கள் தொண்டர் களை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால், தொண்டர்கள் உண்மையை உணர்ந்து எங்களிடம் உள்ளனர். ஊழலில் மலிந் துள்ள அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள் என லட்சக்கணக் கான தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறை வாலும், உடல்நலக் குறை வால் கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாலும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய மக்கள் தலைவராக ஓபிஎஸ் உயர்ந்து வருகிறார்.
நாடகம் அரங்கேற்றம்
சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிசாமி முதல் வராகியுள்ளார். அவர் அதிமுக முதல்வர் அல்ல. சசிகலா குடும்பத்தின் முதல்வர். சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குடுமிபிடிச் சண்டையில் தினகரன் முதன்மையாக வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு வழக்குகளில் அவர் சிக்கியுள்ளார். எனவே, தினகரனை வெளியேற்றுவதற்காக சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து இவர்களை பகடைக் காயாக பயன்படுத்தி ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் முதுகில் சசிகலா குடும்பத்தினர் குத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை துணைபோகக் கூடாது.
இதுவரை ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் இப்போது பாராட்டிப் பேசுகிறார்கள். மக்கள் செல்வாக்கு இருப்பதால் ஓபிஎஸ் பக்கம் இணைய விரும்புகிறார்கள். தேர்தல் நடந்தால் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஸ்டாலின் போன்றவர்கள் இந்த பந்தயத்திலேயே இல்லை.
இரு அணிகளும் இணைய பேச்சு நடத்தினால் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் முதல்வராக வேண்டும் என்றே கூறுவார்கள். எனவே, பேச்சு நடந்துவிடக் கூடாது என்பதற்காக பேச்சுவார்த் தைக்கு வர பயப்படுகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தால் தொண்டர்களே ஓபிஎஸ்ஸை நிறுத் துவார்கள். வருமான வரித் துறை சோத னைக்கு ஆளான அமைச்சர் விஜய பாஸ்கர் நீக்கப் படவில்லை. அதன் மூலம் முதல்வர் வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி யாகியுள்ளது.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.