

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தையொட்டி நிலவி வரும் சூழலை மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் வன்முறை வெடித்ததன் பின்னணி தகவல்களைத் திரட்டுவதில் மத்திய உளவுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
மெரினாவில் லட்சக்கணக்கானோர் கூடிய போராட்டத்தின்போது, தேச விரோத போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழக அரசிடம் இருந்து விரிவான அறிக்கை ஒன்றையும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
மேலும், தமிழக அரசு கேட்டுக்கொண்டால், மத்திய ஆயுதப் படையை அனுப்பவும் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்திய நிலையில், சென்னை முழுவதும் மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து வந்த போராட்டக் களங்களிலும் திங்கட்கிழமை வன்முறை வெடித்தது. இந்த நிலைமையை மத்திய அரசு உடனடியாக கண்காணிப்பதில் தீவிரம் காட்டியது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும், மாநில அரசின் கோரிக்கையை ஏற்றும் மத்திய அரசு ஒரே நாளில் அவசர சட்டத்துக்கு வழிவகுத்தது. இப்போதைக்கு, சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது என்பது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது.
அவசர சட்டம் என்பதே தற்காலிக தீர்வுதான். நிரந்தரத் தீர்வு குறித்து போராட்டக்காரர்களிடம் தமிழக அரசு தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார் அவர்.
மற்றொரு மூத்த அதிகாரி கூறும்போது, "சென்னையில் அமைதி வழியில் நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததன் பின்னணி குறித்து உளவுத்துறை மூலம் மத்திய அரசு தகவல் திரட்டி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
மாநில அரசிடம் இருந்து இதுவரை மத்திய படைகளை அனுப்புமாறு கோரிக்கைகள் வரவில்லை. அப்படி கோரும் பட்சத்தில் உரிய அளவில் படைகள் அனுப்பப்படும்" என்றார் அவர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை பரவலாக ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்திருந்தாலும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பது கவனிக்கத்தக்கது.