

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சிக்கு குற்றாலமும் தப்பவில்லை. அருவிகள் அனைத்தும் வறண்டு காணப்படுவதால், கோடை விடுமுறைக்கு குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடையின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேர வெப்பநிலை பாளையங்கோட்டையில் 106 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது. அக்னி நட்சத்திர நாட்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் கடந்த 29,30-ம் தேதிகளில் ஓரளவுக்கு சாரல் காணப்பட்டது. ஆனால், நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.
ஆண்டு தோறும் சீஸன் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும், அடுத்து வரும் செப்டம்பரிலும், சபரி மலை சீஸன் காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் குற்றாலம் களை கட்டி காணப்படும். இந்த மாதங்களில் அருவிகளில் போதிய தண்ணீர் விழா விட்டால் இங்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வர்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் திருநெல்வேலி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாவுக்கு செல்வோர், வழியில் குற்றாலத்துக்கும் வருகின்றனர். ஆனால், தண்ணீர் இன்றி பாறைகளை மட்டுமே அவர்களால் பார்க்க முடிகிறது. நேற்று காலையில், பிரதான அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் நூல்போல் விழுந்த தண்ணீரில் உள்ளூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தலையை நனைக்க போட்டி போட்டனர்.
பிரதான அருவிக்கு மேல் செல்லும் ஓடையில் வழிந்தோடும் தண்ணீர் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓடையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிரதான அருவியில் விழுந்ததாக இப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஒரு மணிநேரத்தில் அருவியில் தண்ணீர் விழுவது முற்றிலும் நின்று விட்டது.
செங்கோட்டையில் மழை
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத் தில், திருநெல்வேலி மாவட்டத் தில் அதிகபட்சமாக செங்கோட்டை யில் 24 மி.மீ. மழை பதிவா னது. கருப்பாநதி அணைப்பகுதி யில் 14 மி.மீ., குண்டாறு அணைப் பகுதியில் 16 மி.மீ., அடவிநயினார் கோயில் அணைப்பகுதியில் 7 மி.மீ. மழை பெய்திருந்தது.
நீர்மட்டம் விபரம்
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் நேற்று காலையில் 35.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7.06 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 42.41 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 16.40 அடியாக இருந்தது.