Last Updated : 28 Mar, 2017 01:57 PM

 

Published : 28 Mar 2017 01:57 PM
Last Updated : 28 Mar 2017 01:57 PM

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு: சென்னை உயர் நீதிமன்றம்

அக்டோபர் மாதம் 23-ம் தேதிக்கு முன்பு வாங்கிய வீட்டு மனை நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கான பத்திரப்பதிவுக்கு தடை விதித்தது. இந்த வழக்கே இன்று விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாதி ஜி.ரமேஷ் மற்றும் டீக்கா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட போது தடை உத்தரவை தளர்த்துவதாகக் கூறியது, அதாவது தமிழக அரசு இன்னும் ஒருவாரத்தில் முறையான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் தடை தளர்வு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால், அங்கீகரிக்கப்படாத நிலங்களில் புதிய பத்திரப்பதிவை அனுமதிக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டது. மேலும் பதிவு செய்யப்படும் நிலத்தில் சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை எக்காரணத்தை முன்னிட்டும் மீறக்கூடாது என்று என்று எச்சரித்துள்ளது.

மேலும் சாலை, கழிவு நீர் குழாய்கள் பதிக்க போதிய இட வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகல் உத்தரவு பிறப்பித்தனர்.

வழக்கு விவகாரம் என்ன?

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தான் மேற்கொண்ட பொதுநல மனுவில், விவசாய விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உட்பட தமிழகமெங்கும் விளைநிலங்கள் அங்கீகரிக்கப்படாத முறையில் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால் விளைநிலமும் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு இத்தகைய வீட்டு மனைகளும் காரணம். எனவே முறையற்ற விதத்தில் அங்கீகாரமற்ற நிலங்களில் வீட்டு மனைகளை உருவாக்க தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். அதே போல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக் கூடாது என்று பத்திரப்பதிவு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அந்தத் தடை உத்தரவில்தான் தற்போது தமிழக அரசின் உத்தரவாதத்தை ஏற்று உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது, அதாவது அக்டோபர் 23-ம் தேதிக்கு முன் வாங்கிய நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x