

ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா, திமுக வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர்.
இதற்காக 120 இடங்களில் 290 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். உள்ளூர் காவல்துறை, மத்திய சிறப்பு காவல் படை, துணை ராணுவம் என நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மொத்தம் 89.24 சதவீத வாக்குகள் பதிவாயின. ஏற்காடு தொகுதி வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் லாரிகள் மூலம் ஓட்டு எண்ணும் இடமான அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புப் பணியில் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
பின்னர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த அறைக்கு அதிகாலை 5.30 மணிக்கு ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதி, தாசில்தார்கள் தங்கராஜ், பாலசுப்பிரமணியம், சுரேஷ், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் மூன்று முறை சீல் வைத்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் அறையின் வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
இதன் மூலம் 24 மணி நேரமும் கம்ப்யூட்டர் மூலம் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயில், கல்லூரி வளாகம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் அறை என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அதுவரையில் ஆயுதம் ஏந்திய மத்திய காவல் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.